படகு நுளைவாயலில் மூடியுள்ள
மணலை அகற்ற வேண்டும்!

கடலரிப்புக்கு நிரந்தத் தீா்வை வழங்கியதன்
 பின்னரே மணலை அகற்ற வேண்டும்!!

ஒலுவில் துறைமுகத்தில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்

ஒலுவில் துறைமுகம்  முன்பாக இரு வேறுபட்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இன்று 6 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை  இடம்பெற்றுள்ளன.
படகு நுளைவாயலில் மூடியுள்ள மணலை அகற்றுமாறு கோரி  மீனவர்கள்  துறைமுக  நுளைவாயல் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட அதேவேளை, கடலரிப்புக்கு நிரந்தத் தீா்வை வழங்கியதன் பின்னரே, மணலை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ஒலுவில் பொதுமக்கள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்ட அனைத்து மீனவர் அமைப்புகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மீனவத் தொழிலார்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய பின்னரே, குறித்த துறைமுகத்தில் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது மணலை அகற்றுவதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து ஒலுவில் பிரதேசமக்கள் துறைமுக பிரதான நுளைவாயல் முன்பாக மீனவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரா மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அத்துடன், துறைமுக நுளைவாயல் கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் மேற்கொண்டு வந்த கடற்தொழில் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கக்கானவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஒலுவில் பிரதேச மீனவர்களினதும், அவர்களினது குடும்பங்களினதும் நலன் கருதி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை வழங்குமாறு இங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு, எமக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு, பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலுவில் துறைமுகத்தில் மணல் குவிந்துள்ளதனால் கடந்த ஒரு வருடகாலமாக கடற்தொழில் ஈடுபட்டு வரும் கல்முனை, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2,800 மீனவர்கள் தமது படகுகளை தொழிலுக்கு கொண்டு செல்லமுடியாமல் பெரும் கஷ்டங்களையும், இன்னல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒலுவில் துறைமுகத்தால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை எத்தனை முறை அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக் கூறியும் சரியான பலன் எதுவும் இல்லை. கடலரிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் மக்களின் எதிர்கால இருப்பை கவனத்தில் கொண்டு" ஒன்று நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்! அல்லது சரியான முறையில் இயங்காத துறைமுகத்தை மூட வேண்டும்! என்ற கோரிக்கையில் ஒலுவில் மக்கள் சுழச்சி முறையில் அமைதி போராட்டத்தை இன்றுலிருந்து ஆரம்பித்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்படுகின்றது.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top