பிரதான வேட்பாளர்களின்
பிரசார செலவு ரூ. 3 பில்லியன்
கோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன்,
அநுர 160 மில். செலவு
பணம் எங்கிருந்து வந்தது - CMEV



கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) அறிவித்துள்ளது.

தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு நிறுவனமான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) தேர்தல் கண்காணிப்பு பிரசார செலவுகள் தொடர்பில் முதன் முறையாக மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இறுதி அறிக்கை இன்று (13) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட கட்டமைப்போ, ஒழுங்குமுறை பொறிமுறையோ இல்லை என்பதோடு, அதற்கான தேவையை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை விளம்பரம் மற்றும் கூட்டங்களுகாக, மூன்று முக்கிய வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவுகளாக மதிப்பிடப்பட்ட செலவுகளை உத்தேசமாக கணக்கீடு செய்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கட்சி  அச்சு ஊடகம்           தொலைக்காட்சி  கூட்டம்/ஏனைய பிரசாரம்        மதிப்பிடப்பட்ட குறைந்த செலவு
பொதுஜன பெரமுன         82 மில்லியன்            853 மில்லியன்         503 மில்லியன்         1,518 மில்லியன்
புதிய ஜனநாயக முன்னணி     175 மில்லியன்         544 மில்லியன்         703 மில்லியன்         1,422 மில்லியன்
தேசிய மக்கள் சக்தி          12 மில்லியன்            32 மில்லியன்            116 மில்லியன்         160 மில்லியன்
அந்தந்த ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக அறவிடும் கட்டணங்களுக்கு ஏற்ப, வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக CMEV தெரிவித்துள்ளது.

இந்த செலவினங்களில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவற்றையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய, தேர்தல் களமானது சமமற்றதாக காணப்படுவது தெளிவாவதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

"வரையறையற்ற பணத்தை செலவிட்டு எப்படியாவது தங்களது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இதன் மூலம் வேட்பாளர்களுக்கு முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் தேர்தல் களம் சமமற்றதாக அமைந்துள்ளதாக" அவர் தெரிவித்தார்.

"இவ்வாறு கிடைக்கும் நிதி யாருக்கு சொந்தமானது என்பதுதான் பிரச்சினை. நிதி வழங்குபவர் போதைப்பொருள் கடத்துபவரா அல்லது பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரா என்பது ஒரு மர்மமாகும். இந்த சூழ்நிலையைத் தடுக்க இந்த ஆதாரங்களையும் மொத்த செலவையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது தொடர்பில் அவசியமான சட்டத்தையும் கொண்டு வருவது அவசியமாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் செலவு தொடர்பான சட்டங்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற 2017 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்மொழிந்து அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டது. ஆயினும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தலில் நிதிக் கட்டுப்பாடு இல்லாமையானது,  ஒரு பெரிய தடையாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய சட்டங்களை கொண்டுவருவது மிக அவசியமாக உள்ளதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் செய்த செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளனவென தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 54
2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 1,825 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ.132
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 2,705 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 180
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 .மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 450 என மதிப்பிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top