தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றாலும்,
ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாத நிலை




ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருந்த கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுகிறார்.

எனினும் இதுவரை அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய இழக்கவில்லை என அந்நாட்டின் பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், அதிகாரப்பூர்வமாக ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும் இடையிலான போராக மாறியுள்ளதாக ஹரின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் மூன்றாவது பட்டியலை அமெரிக்கா நேற்று வெளியிட்டுள்ளது. அதிலும் நந்தசேன கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இதன்மூலம் கோத்தபாய தற்போதும் அமெரிக்க குடிமகனாகவே காணப்படுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதியாக செயற்பட அவரால் முடியாது.

அமெரிக்காவின் முந்தைய காலாண்டு அறிக்கையில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இருக்காத போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையில் நிச்சயமாக அது இடம்பெறும் என்று அவரது பேச்சாளர்கள் உறுதியாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தமைக்கான ஆவணங்கள் என சிலவற்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top