கொலைக் குற்றவாளிக்கு
பொது மன்னிப்பு வழங்கிய மைத்திரி!
தொடரும் கைதிகளின் போராட்டம்
றோயல் பார்க் படுகொலையாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ள நிலையில், நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, தங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி இரண்டு கைதிகள் நேற்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்துடன், சமார் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தென்னிலங்கையில் உள்ள சிறைக்கைதிகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வைத்து யுவான்னே ஜோன்சன் என்ற யுவதியை , ஜூட் அந்தோனி ஜயமஹா கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது பதவியில் இறுதிக்காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மைத்திரியின் இந்த நடவடிக்கையினை விமர்சித்துள்ளார்.
“பெண்ணொருவரை கொலை செய்த கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை கண்டிக்கிறேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை பார்த்து கொண்டிருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதியை போன்று ஒருபோதும் நான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டேன் என” சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை குறித்து கொலை செய்யப்பட்ட யுவதியில் சகோதரி கரொலின் ஜான்சன் பிரட்லி அண்மையில் பேஸ்புக் பக்கதில் பதிவொன்றையும் இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment