கல்முனை செயலகப் பிரச்சினை
தீராமல் இருப்பதற்கு காரணம் யார்?
காரணம் என்ன?



கல்முனை செயலகப் பிரச்சினை இன்னும் தீராமல் இருப்பதற்கான பிரதான காரணம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; என்பது எனது மனச்சாட்சியை அடகுவைக்காத எனது கருத்தாகும்.

தமிழர்கட்காக, அவர்களது கோரிக்கையில் தே கூ இன் தலைவர் சம்பந்தன் வாதாடுகிறார். நியாயமே இல்லாத ஒரு கோரிக்கையை நியாயம் என்று சுமந்திரன் வாதாடுகிறார். தமிழ் பா க்கள், தலைவர்கள் என்று எல்லோரும் வாதாடுகின்றனர்.

மிகவும் துரதிஷ்டவசமான விடயம் என்னவென்றால் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களுக்காக வாதாடுவதற்குப் பதிலாக அவர் நீதிபதியாக செயற்பட முனைகின்றார்.

அண்மையில் கல்முனையில் இருந்து அமைச்சர் ஹக்கீமைச் சந்திக்கச்சென்ற ஒரு குழுவில் ஒருவர், “ நீங்கள் கல்முனை தொடர்பாக எதுவும் வெளிப்படையாக பேசுவதில்லை; என்று கல்முனை மக்கள் உங்களைக் குறைகூறுகின்றார்கள்;” என்று கூறியபோதுநான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடியாது; அவற்றை கட்சியின் பா க்கள் தான் பேசவேண்டும்;” என்றார்.

அப்பொழுது, “ ஒரு கட்சியின் தலைவர் ஏனையவர்களைவிடவும் சற்று நிதானமாகப் பேசவேண்டும்; என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் உரிய அவையில் ஏன் முஸ்லிம்களின் நியாயத்தை முன்வைத்து வாதாடாமல் இருக்கின்றீர்கள்? முழுமையான நியாயம் முஸ்லிம்களின் பக்கம் இருந்தும் ஏன் இதனை உங்களுக்கு செய்துமுடிக்க முடியாமல் இருக்கின்றது? என்ற கேள்வியைத் தொடுத்தேன்.

அதற்கு அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, “ இரு பக்கமும் பேசிப்பேசித்தானே ஒரு தீர்வுக்கு வரவேண்டுமென்றார்.”

இங்கு அவர்பேசிஎன்று கூறவில்லை; மாறாகஇரு தரப்புடனும் பேசிப்பேசி” (சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து); அதாவது, அவர் இரு தரப்பிற்குமிடையில் ஒரு நடுநாயகமாக, நீதிபதியாக இருக்க முனைகின்றார். அந்தத் தரப்பை கொஞ்சம் விட்டுக்கொடுக்கச் சொல்வது; இந்தத் தரப்பை கொஞ்சம் விட்டுக்கொடுக்கச் சொல்வது....

இங்கு இரு கேள்விகள் எழுகின்றன. ஒன்று: நீங்கள் நடுவராகச் செயற்பட்டால் முஸ்லிம்கள் சார்பாக வாதாடுவது யார்? நீங்கள்தானே முஸ்லிம்களின் பிரதான அரசியல் தலைவர்! உங்களது கட்சிக்குத்தானே காலாகாலமாக கல்முனை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கிறார்கள்.
இரண்டு: நியாயமில்லாவிட்டாலும் அவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள்; என்பதற்காக விட்டுக்கொடுக்க வேண்டுமா?

பிரதமரை நாங்கள் சந்தித்தபோது சொன்னார்கல்முனை வரலாற்று ரீதியாக முஸ்லிம்களின் நகர்; என்றுதான் நாம் அறிந்திருக்கின்றோம். சுமந்திரனிடம் கூறிவிட்டேன்; கல்முனை நகரைவிட்டுவிட்டு ஏனைய ஊர்களை எவ்வாறு பிரிப்பது; என்பதை இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்; என்றுஎன்றார்.

அதன்பின் திரு சுமந்திரனை தொலைபேசியில் அழைக்கின்றார். சற்று நேரத்தில் அவரும் வருகின்றார். அவரும்பிரதமரின் செய்தியை எங்கள் கட்சியில் எத்திவைத்துவிட்டேன்;” என்கின்றார்.

பெரிய மன ஆறுதலுடன் நாங்கள் திரும்பி வருகின்றோம். அதன்பின் தமிழ்த் தரப்பினர் உங்களிடம் சோலி புரட்டினால் அவர்களுக்கு நியாயத்தை எடுத்துக்கூற ஏன் உங்களால் முடியாமல் இருக்கிறது?

முஸ்லிம்களின் நியாயத்தின் சுருக்கம்.
————————————————-
கல்முனையின் பிரதான பிரச்சினை என்ன? பாண்டிருப்பிற்கு, சேனைக்குடியிருப்பிற்கு, ..... தனியாக ஒரு செயலகம் இல்லை. அவர்களுக்கு தனியாக ஒரு செயலகம் வேண்டும். தாராளமாக வழங்கலாம். அதற்காக கல்முனை நகரின் ஒரு பகுதியை உடைத்து பாண்டிருப்பு செயலகத்துடன் ஏன் இணைக்க வேண்டும்?

கல்முனையில் சில தமிழர்கள் இருக்கின்றார்கள்; என்பதற்காகவா? அவ்வாறாயின் முஸ்லிம் பெரும்பான்மை அலகொன்றில் ஒரு தமிழரும் இருக்கக்கூடாதா? அப்படியாயின் அது முஸ்லிம்களுக்கும் பொருந்தவேண்டுமே!

தமிழ் பாடசாலை மற்றும் தேவாலயம் இருப்பதை ஒரு நியாயமாக காட்டுகிறார்களாம். ஏன் இருக்கக்கூடாதா?

எத்தனையோ பள்ளிவாசல்களும் முஸ்லிம் பாடசாலைகளும் தமிழ் பெரும்பான்மை அலகுகளுக்குள் இல்லையா? வடகிழக்குப் பூராகவும் இவற்றையெல்லாம் கணக்குப் பார்ப்போமா? ஏன் கல்முனையில் மாத்திரம் ஓரப்பட்ச நியாயம்?

முழு வடகிழக்கிலும், ஏன், முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பிரதான நகரம் கல்முனை; என்பதை பொறுக்க முடியாத இனவாதம்தானே இது? இதனை ஏன் சகோ ஹக்கீமால் சுட்டிக்காட்டி பேசமுடியாமல் இருக்கிறது?

நீதிபதி ஸ்தானத்தில் இருந்தால் எவ்வாறு பேசுவது? முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயற்பட்டால்தானே பேசமுடியும். அதற்கு அவர் ஆயத்தமில்லையே!

கடந்த இரண்டொரு தினங்களுக்கு முன் கல்முனையில் இருந்து ஒரு குழு திரு பசில் ராஜபக்ச அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது,

முழு இலங்கையிலும் கல்முனைதான் முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதான நகரமாக நாம் அறிந்திருக்கின்றோம். மட்டுமல்ல, உலக வரைபடத்திலேயே, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற முஸ்லிம்பான்மை நகரம் கல்முனை; எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. என்று கூறுகின்றார்.

எனவே, கல்முனை முஸ்லிம்களின் நகரம் என்பதை பிரதமரும் அடுத்த கட்சித் தலைவர்களும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்த் தரப்பினரின் விதண்டாவாதத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் கல்முனையில் இந்தப் பகுதியை விட்டுக்கொடுப்போமா? அந்தப்பகுதியை விட்டுக்கொடுப்போமா?, விட்டுக்கொடுப்பு செய்யத்தானே வேண்டும்;எனத் தடுமாறுகிறார்கள்; முஸ்லிம்களின் தானைத் தளபதிகள்.

உங்களுக்கு சொந்தமான காணியில் ஒருவன் நியாமில்லாமல் பங்குகேட்டால் பேசிப்பேசி விட்டுக்கொடுத்து தீர்வுகாண்போம்; என்பீர்களா?

கல்முனையின் எல்லை தெற்கே சாஹிறா வீதி, வடக்கே தாளவட்டுவான்; என்பது 1897 ம் ஆண்டு வர்த்தமானி கூறுகின்றது. அவர்கள் மாற்று எல்லையை முன்வைத்தால் இதற்கு முரணான இதை மேவக்கூடிய ஆவணத்தைக் காட்டுமாறு ஏன் உங்களால் கேட்க முடியாது?

உங்களின் பலயீனத்தால் M S காரியப்பர், M C அஹமட், A R மன்சூர், தலைவர் M H M அஷ்ரப் போன்ற முன்னோடிகள் பாதுகாத்துத் தந்த கல்முனையை துண்டாடி தாரைவார்க்கப்போகிறீர்களா?

இந்தப் பிரச்சினையை இன்னும் சரியான முறையில் முன்வைக்க உங்களால் முடியவில்லை.

அண்மையில் இவ்விடயம் தொடர்பாக திரு சஜித் பிரேமதாசவைச் கல்முனையைச் சேர்ந்த ஒரு குழு சந்தித்தோம். அங்கு அமைச்சர் ஹக்கீம் எவ்வாறு விடயத்தை ஆரம்பிக்கின்றார்; என்றால், “ கல்முனைப் உப பிரதேச செயலகப் பிரச்சினை... அங்கு எல்லைப் பிரச்சினை இருக்கிறது; அதற்கு ஒரு “Delimitation Committee” போட்டு எல்லைப் பிரச்சினை தீர்க்க வேண்டும்.

இதுவே, சகோ ஹக்கீம் கல்முனைப் பிரச்சினையில் இருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கின்றார்; என்பதற்கு அத்தாட்சியாகும். அன்றிலிருந்து இன்றுவரை delimitation committee பற்றியும் எல்லைப் பிரச்சினை பற்றியும்தான் பேசுகின்றார்கள்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்- கல்முனையில் முஸ்லிம்களுக்கு எல்லைப் பிரச்சினையுமில்லை. Delimitation Committee பிரச்சினையுமில்லை.

கல்முனையில் என்ன எல்லைப் பிரச்சினை இருக்கிறது? 1897ம் ஆண்டு வர்த்மானியில் கல்முனையின் எல்லை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 1987ம் ஆண்டிற்கு முன்பிருந்த உள்ளூராட்சி எல்லை தெளிவாக இருக்கிறது. எங்களுடைய பிரச்சினை கல்முனை துண்டாடப்படக்கூடாது; என்பதாகும்.

Delimitation Committee போடவேண்டும்; என்றால் அரசாங்கம் போடட்டும். அது அரசின் வேலை. நாம் நமது பிரச்சினையை சொல்வதற்குப் பதிலாக ஏன் Delimitation Committee ஐப் பற்றிப் பேசவேண்டும்.

அதுதான் தேவையென்றால் எதற்காக பிரதமரைச் சந்திக்கின்றோம்? எதற்காக சஜித்தை சந்திக்கின்றோம்? எதற்காக பசிலைச் சந்திக்கின்றோம்? Delimitation Committee ஐப் போடச்சொல்லிவிட்டு அந்த Committee ஐச் சந்தித்தால் போதுமே! தமிழ்த்தரப்பினர் Delimitation Committee கேட்கிறார்களா?

அந்தக் Committee முஸ்லிம்களுக்கு பாதகமான அறிக்கையைத் தந்தால் அதன்பின்போய் நியாயம் கேட்கப்போகிறீர்களா? “ நீங்கள் தானே Delimitation Committee கேட்டீர்கள். இப்பொழுது ஏன் எதிர்க்கின்றீர்கள்? என்று கேட்டால் என்ன பதில்?

நாம் நமது பிரச்சினையை மட்டும்பேசினால் நாளை அவர்கள் போடுகின்ற Delimitation Committee பிழைவிட்டாலும் நாம் கூறலாம்; ‘ பாருங்கள் நாம் உங்களிடம் தெளிவாக எமது பிரச்சினையை பல தடவை கூறியும் இந்த Delimitation Committee எங்களுக்கு அநியாயம் செய்திருக்கிறது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று.

இவ்வளவு காலமும் Delimitation Committee, Delimitation Committee என்று காலத்தைக் கடத்தியதற்குப் பதிலாக எங்களுடைய நியாயங்களை முன்வைத்து வந்திருந்தால் இன்று எல்லோரும் நமது நியாயங்களை ஏற்றிருப்பார்கள். இன்றுவரை தமது நியாயங்கள் சரியாக முன்வைக்கப்படாமல் காலத்தைக்கடத்தி இன்று கல்முனையை ஹிஜ்ரா வீதியால் விட்டுக்கொடுப்பதா? Rest House வீதியால் விட்டுக்கொடுப்பதா? கடற்கரைப்பள்ளி வீதியால் விட்டுக்கொடுப்பதா? பிரதானவீதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுப்பதா? என்று கையாலாகத்தனமாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

சகோ ஹக்கீம் அவர்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய பலயீனம்; எந்தவொரு விடயத்தையும் தெட்டத்தெளிவாக உறுதியாக பேசமுடியாமல் இருப்பதாகும். எமது உள்ளூர் பாசையில் சொல்வதானால்; எல்லாவிடயங்களிலும் ஒருவகைஇழுவனா-படுவனாவாகத்தான் பேசுவார். அழுத்தம் திருத்தமாக அவரால் பேசமுடியுமென்றால் அவர் தலைமையேற்ற இந்த 19 வருடத்தில் முஸ்லிம்களின் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாம்.

எனவே, உங்களுடைய பலயீனத்தினால் முஸ்லிம்களின் முகவெற்றிலையை இழக்க முடியாது. உங்களால் இப்பிரச்சினையைத் தீர்க்கமுடியாவிட்டால் அதை அவ்வாறே இருக்க விடுங்கள். இன்ஷாஅல்லாஹ், கல்முனைக்கும் ஒரு நாள்நல்லகாலம்பிறக்கும். அப்பொழுது தீர்த்துக்கொள்வோம்.

மறைந்த தலைவரின் தியாகத்தால் உருவான கட்சியை உங்களிடம் தந்ததற்காக அவரது சொந்த ஊரை, அவர் கனவுகண்ட அந்த முகவெற்றிலையை சிற்றினவாதத்திற்கு மண்டியிட்டு சுக்கு நூறாக்கி விடாதீர்கள்; அல்லாஹ்வுக்காக.
வை எல் எஸ் ஹமீட்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top