எம்சிசிக்கு எதிராக பேராயரின்
பெயரில் போலி அறிக்கை
       எதிர் தரப்பின் வேலை?

அமெரிக்காவுடன், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கடித தலைப்பில், போலியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டுள்ளது.

எம்சிசி உடன்பாட்டுக்கு எதிராக, கடுமையான சொற்களுடன் கூடியதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. ஒக்ரோபர் 31ஆம் திகதியிடப்பட்ட இந்த அறிக்கையில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் போலியான கையெழுத்தும் காணப்படுகிறது.

எனினும், கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எம்சிசி உடன்பாடு தொடர்பான எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று, கர்தினாலின் செயலகம் அறிவித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ச தரப்பே, கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயரில் போலியான இந்த அறிக்கையை வெளியிட்டு மலிவான அரசியல் இலாபம் தேட முனைவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த போலி அறிக்கை, அரசாங்க மருத்துவர் சங்கத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவர் சங்கம், எம்சிசி உடன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருவதுடன், அதன் தலைவரான, அனுருத்த பாதெனிய, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மேடையிலும் அமர்ந்திருந்தார்.

அதனால் கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, கண்டியில் நடந்த சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்விலும், ஒரு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top