பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு

தேசிய அடையாள அட்டை


பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கும் ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக திணைக்களத்தில் விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு விண்ணப்பத்தில் தமது சுய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும். இதன் பின்னர் பிறப்ப சான்றிதழுக்கு பதிலாக உறவினர் மூவரின் தேசிய அடையாள அட்டையின் விபரங்களையும் உறவினர் அல்லாத மூவர் அதாவது நீண்டகாலமாக அந்த பிரதேசத்தில் வசிக்கும் மூவரினது தேசிய அடையாள அட்டை விபரங்களையும் உள்ளடக்கிய சத்திய கடிதத்தையும் சமர்பிக்க வேண்டும்.


இதனை கிராம உத்தியோகத்தர் மூலமாக பிரதேச செயலகத்தில் உறுதி செய்து திணைக்களத்தில் உள்ள விசேட பிரிவுக்கு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் இல்லாத ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெறவேண்டுமாயின் அவ்வாறான ஒருவர் இலங்கை பிரஜையாக இருப்பதுடன் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வாக்காளர் இடாப்பில் உள்ள பதிவையும் இதற்காக பயன்படுத்த முடியும்.
இந்த விசேட பிரிவுக்கு இதுவரையில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த புதிய நடைமுறைகுறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடமாடும் சேவைகள் இத்திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வருகின்றது.விசேடமாக தோட்ட மக்கள் தமது ஊழியர் சேமலாப நிதியை இலகுவாக பெற்று கொள்ள தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்று கொள்வதற்கு , அதாவது பிறப்பு சான்றிதழ் இல்லாததன் காரணமாக தேசிய அடையாள அட்டை அற்றோருக்காக தோட்டங்களில் இவ்வாறான செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக மேலும் இதுதொடர்பில் விபரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top