மத்திய வங்கி பிணை முறி மோசடி

 மற்றும் பாரிய ஊழல் மோசடி

பெப்ரவரி 06 இல் ஜனாதிபதி ஆணைக்குழு

அறிக்கைக்கான விவாதம்



மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாதம் பெப்ரவரி 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற பிரதி பிரதி செயலாளர்நாயகத்தின் அலுவலக பிரதானி நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டமான, கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று (30) நண்பகல் இடம்பெற்றது.

இதில், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பாராளுமன்ற விவகார குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தினேஷ் குணவர்தன எம்.பி, ரவி கருணாநாயக்க எம்.பி, விஜித ஹேரத் எம்.பி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எம்.. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமரினால் விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய, குறித்த விவாதம் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான சாத்தியம் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு, சபாநாயகரின் விசேட அழைப்பின் பேரில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த அபேசேகர, பேராசிரியர் சாமுவேல் ரத்னஜீவ மற்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்தும் பொருட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன் குறித்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்ற விவாதத்தை மேற்கொள்வது தொடர்பிலான முடிவொன்றுக்கு வருவது சிறப்பானது என சுட்டிக்காட்டினார்.

குறித்த கருத்துக்கு பெருமளவானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் ஆலோசனையை பெறவுள்ளதாக தெரிவித்த நிலையில் குறித்த கூட்டம் எவ்வித முடிவின்றி நிறைவடைந்தது.

இதனையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவது உகந்தது என சபாநாயகரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதற்கமைய நிலையான கட்டளையின் 14 ஆவது பிரிவின் கீழ், குறித்த தினத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பிரதமரினால் சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக கோரப்பட்டதற்கமைய குறித்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அன்றைய தினம் பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான விவாதங்கள் இடம்பெறும் எனவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top