முஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி

மரச் சின்னம் என்று கூறியோர்,

எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்

ஓட்டமாவடியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது என மேடைகளிலே அடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில்  போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மீராவோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதிஅமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மேடைகளிலே என்னையும், பிரதி அமைச்சர் அமீர் அலியையும் மோசமாக விமர்சித்து, எம்மை இந்தத் தேர்தலில் தாங்கள் வீழ்த்தப் போவதாக மு.கா தலைமை வீரவசனங்களைப் பேசி வருகின்றது. ஆனால், ஓட்டமாவடியில் திரண்டுள்ள சனத்திரளை கண்டவுடன், அந்தத் தலைமையானது பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்ப முயல்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

கல்குடா மக்களின் சொத்தான பிரதி அமைச்சர் அமீர் அலியை வீழ்த்தப்போவதாகக் கூறுவோர், கல்குடா மண்ணின் விமோசனத்துக்கான மாற்றுப் பரிகாரம் என்னவென்று தெரிவிக்கவில்லை. அபிவிருத்திகளுக்கான மாற்றுத் திட்டங்களையும் இதுவரை அவர்கள் முன்வைக்கவில்லை.

இந்த மக்களின் காணிப்பிரச்சினை, எல்லைப் பிரச்சினை மற்றும் இன்னோரன்ன ஏகப்பட்ட பிரச்சினைகள் பற்றி இற்றைவரை கவலை கொள்ளாதவர்கள், தற்போது நீலிக்கண்ணீர் வடித்து தமது இருப்புக்காக மக்களை உணர்ச்சியூட்டி வருகின்றனர்.

சிறுபான்மையினரையும், சிறுபான்மைக் கட்சிகளையும் நசுக்க வேண்டும் என்ற நோக்கிலே கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துக்கள் குறித்து, அதிகம் கவலைப்படுபவர்களில் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதானமானவர். ஜனாதிபதியுடனோ, பிரதமருடனோ, அமைச்சரவையிலோ தைரியமாக நேருக்குநேர் பேசும் திராணிகொண்ட பிரதியமைச்சர் அமீர் அலி, மக்கள் காங்கிரஸின் அரசியல் பயணத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் முக்கிய பங்காற்றி வருகின்றார். இந்த கரடுமுரடான பயணத்தில் நானும் அவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போன்று இயங்கி வருகின்றோம்..

சமூகத்தின் விமோசனத்துக்காக பிரக்யுடன் செயற்பட்டு வரும் மக்கள் காங்கிரஸை, அழித்துவிட வேண்டுமென இனவாதிகள் கங்கணம் கட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலே, பேரினவாத சக்திகளுக்கு தீனிபோடும் பாணியிலே முஸ்லிம் காங்கிரஸால் கூலிக்கமர்த்தியவர்கள் செயற்பட்டு வருவது வேதனையானது.

எமது அரசியல் வாழ்வை இல்லாதொழிக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும், இந்தச் சதிகாரக் கூட்டத்தின் நடவடிக்கைகள் எல்லை மீறி வருகின்றனர். ஆனால், இறைவன் எங்களுடன் இருப்பதால் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நமது முஸ்லிம் சமூகம் இன்று ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளது. தமிழ்ச் சகோதரர்கள் தமது அரசியல் விடுதலைக்காக சுமார் 70 வருடகாலம் உரிமைப் போராட்டத்தை நடத்தினர்.

ஜனநாயக போராட்டத்தில் நம்பிக்கை இழந்த தமிழ் இளைஞர்களின், ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் தோல்வியடைந்த நிலையிலே, தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக வழியிலேதான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இப்போது தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். ஆரம்பகாலத்தில் ஐம்பதுக்குஐம்பது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர், தமிழீழமாக மாறி அது சாத்தியப்படாத நிலையிலே மீண்டும் சமஷ்டியில் வந்து நிற்கின்றது. வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டுமென்ற அழுத்தமான கோரிக்கை இதன் வெளிப்பாடே.

நல்லாட்சியைக் கொண்டுவருவதில் முஸ்லிம் சமூகம் எத்தகைய பங்களிப்பைச் செய்திருக்கின்றதோ, அதேபோன்ற பங்களிப்பை தமிழ்ச் சமூகமும் மேற்கொண்டிருக்கின்றது.

எனவே, வடக்கையும், கிழக்கையும் இணைத்து சமஷ்டி தரவேண்டும் என்று ஜனாதிபதியையும், பிரதமரையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையிலே இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேசமும் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், நமது சமுதாயத்தின் மீது அடிமைச் சங்கிலி போடப்பட்டு விடக்கூடாது என்பதிலே நாம் விழிப்பாக இருக்கின்றோம். அரசுக்குள்ளே இருந்து போராடுகின்றோம். தீர்வு முயற்சிகளின் ஒவ்வொரு நகர்வுகளிலும் உன்னிப்பாக இருந்து வருகின்றோம்.

ஆனால், மு.கா தலைமையோ தமது கதிரையைப் பற்றியே இன்னும் யோசித்துக்கொண்டிருக்கின்றதேயொழிய, சமூகத்தைப் பற்றிய சிந்தனை எள்ளளவும் இல்லை.

வடக்குகிழக்கு இணைப்பு தொடர்பில் வாய் திறக்க மறுக்கின்றது. அதைப்பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லை. தெளிவான நிலைப்பாடும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ஊடகப்பிரிவு






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top