தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களிடம் வந்து

வாக்கு கேட்பவர்களை நிராகரியுங்கள்

உயிலங்குளத்தில் அமைச்சர் றிஷாட்


கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள், உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

மன்னார் பிரதேச சபையில் உயிலங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், "ஐக்கிய தேசிய முன்னணியில்" போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உயிலங்குளத்தில் நேற்று மாலை (25/01/2018) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

உள்ளூராட்சித் தேர்தல் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தலாகவும், ஓர் அடிக்கல்லாகவும் அமைகின்றது. பாதை உட்கட்டமைப்பு, நீர்வசதி, வாழ்வாதார முயற்சிகள், சுயதொழில் வாய்ப்பு, மின்சார வசதி, வடிகான் அமைப்பு போன்றவற்றை சீராகப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உருவாக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் செயலாற்றும் என நம்புகின்றேன். அந்த வகையில் மத்திய அரசில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு அமைச்சராக இருக்கும் நானும், கடந்த காலங்களில் உதவியது போன்று இம்முறை எமது கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளை நீங்கள் தெரிவு செய்தால், அவர்கள் மூலம் உங்களுக்கு மேலும் உதவ முடியும். கடந்த காலங்களிலும் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு பணிகளை நாம் மேற்கொண்ட போதும், ஒருசிலர் எமது பணிகளை மனதார ஏற்றுக்கொண்டு எமக்கு ஆதரவு அளித்தனர். வேறுசிலர் எம்மை #விமர்சித்துக்கொண்டு மாற்று வழிகளைக் கையாண்டு, கொள்கை கோட்பாடுகளை கருத்திற்கொண்டு வாக்குகளை மாற்றுக் கட்சிகளுக்கு வழங்கி இருக்கின்றனர்.

நாங்கள் என்னதான் உதவிகளைச் செய்த போதும், ஒருபக்கச் சார்பாக நின்று சிலர் தொழிற்பட்டதையும், விமர்சித்ததையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்தப் பிரதேசத்தில் எங்களுக்காக, நாங்கள் வாக்குத் திரட்ட வரவில்லை. உங்கள் ஊரிலுள்ள மக்கள் பணியாளர்களை இனங்கண்டு தேர்தலில் நிறுத்தியிருக்கின்றோம். உங்கள் சுக துக்கங்களில் பங்கேற்று, உங்களுடன் வசிப்பவர்களையே நீங்கள் பிரதிநிதிகளாக்கினால், அவர்கள் மூலம் பயனடையப் போவதும் நீங்களே. மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு உரிய திட்டங்களை வகுத்து, நான்கு வருட காலத்துக்குள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்போம்.

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் ஒற்றுமையுடன் நீங்கள் வாக்களித்து, எமது பிரதிநிதிகளை தெரிவு செய்தால் பயனடையப் போவது நீங்களே. கடந்த காலயுத்தத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, மடு மற்றும் வவுனியா வடக்கு பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் முழுமையாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். சமாதானம் ஏற்பட்டு பின்னர் மக்கள் மீளக்குடியேறிய போது, நாங்கள் முடிந்தளவில் அவர்களின் குடியேற்றத்துக்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பூரணமான உதவிகளை வழங்கியிருக்கின்றோம்.
அதேபோன்று, வவுனியா மெனிக்பாமில் தஞ்சமடைந்திருந்த மூன்று இலட்சம் அகதிகளை குறுகிய காலத்தில் அரசின் கொள்கைக்கிணங்க நாங்கள் குடியேற்றியிருக்கின்றோம். எமது செயற்பாடுகள் தேர்தலை இலக்கு வைத்து இடம்பெறுபவை அல்ல. எனினும், உள்ளூராட்சி நிறுவனங்கள் என்ற கட்டமைப்பின் கீழ் இந்தப் பணிகளை நாங்கள் செவ்வனே செய்வதற்கு, பிரதேச சபையில் உங்கள் பிரதிநிதிகளை எங்கள் கட்சி சார்பாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இனரீதியாக வாக்குக் கேட்பவர்களுக்கு பிரிந்து நின்று வாக்களித்து பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

- ஊடகப் பிரிவு -

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top