மர்ஹும் அஷ்ரப் மீது பற்றுதல் காட்டுபவர்கள்

அன்னாரின் பெயரில் உள்ள பூங்காவில்

அக்கறையில்லாமல் இருப்பது ஏன்?

சாய்ந்தமருது மக்கள் கேள்வி!

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்  மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை மதிப்பதாகக் கூறி அன்னாரின் படத்தை தேர்தல் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் போடுவது மாத்திரமன்றி மேடைக்கு மேடை அன்னாரின் பெயரைச் சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பவர்கள் சாய்ந்தமருதில் உள்ள அன்னாரின் பெயரில் உள்ள பூங்காவை அபிவிருத்தி செய்வதில் 3 வருடங்களுக்கும் அதிகமான காலங்கள் கடந்தும் எந்த அக்கறையும் காட்டவில்லை என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் மற்றும்,நவீன வசதிகள் எதுவும்  பூரணமாக அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில் இன்றுவரை இருந்து கொண்டிருப்பதாக இங்குள்ள பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சாய்ந்தமருதில் நிர்மாணப் பணிகள் முற்று முழுதாக முடிவுறாத நிலையில் அவசர அவசரமாக  திறந்து வைக்கப்பட்ட தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா சுமார் 39 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் திறந்த அன்றிருந்த தோற்றத்திலேயே கட்டடத்துடன் மாத்திரம் இப்பூங்கா காட்சியளித்துக் கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பூங்கா திறந்து வைக்கப்பட்ட போது  நிர்மாணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் உள்ளிட்ட இன்னும் சில நவீன வசதிகள் இப்பூங்காவில் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்று  இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னரே  கல்முனை மாநகர சபையிடம் இப்பூங்காவை ஒப்படைத்து பூரணத்துவமான பூங்காவாகாக பொது மக்களிடம் கையளிக்கத்  திட்டமிட்டிருந்த நிலையில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவை அவரது 66வது பிறந்த தினமான ஒக்டோபர் 23 ஆம் திகதி திறக்க வேண்டும் என சிலர் விரும்பியதன் பேரிலேயே இப்பூங்கா 2014 ஆம் ஆண்டு  அரை குறையான வேலைகள் முடிந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்கா சகல வசதிகளும் செய்யப்பட்டு பூரணத்துவமாமான ஒரு பூங்காவாக இப்பிரதேச மக்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் நாமத்தை பாதுகாக்க வேண்டியவர்களின் கட்டாயக் கடமை அல்லவா? ஆனால், அன்னாரின் பெயரை வைத்து சிலர் சுய நல அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடக்வியலாளர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top