சாரதியும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!!
சம்மாந்துறை அஞசல் அலுவகத்தின் அவலநிலை பாரீர்!!!
சம்மாந்துறையில் சுமார் 70 ஆயிரம் மக்களுக்கு சேவயாற்றிக்கொண்டிருக்கும் சம்மாந்துறை பிரதான அஞசல் அலுவகத்தின் அவலநிலை குறித்து இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மறைந்த ரி.பி. விஜேதுங்க தபால் சேவைகள் அமைச்சராக இருந்த சமயத்தில் மர்ஹும் எம்.ஏ மஜீத் அவர்களின் முயற்சியால் 1978 ஆம் ஆண்டு சம்மாந்துறை மக்களுக்காக திறந்து வைக்கப்பட்ட பிரஸ்தாப தபாலகம் இன்று வரை எதுவித திருத்தங்களும் இன்றி அபாயகரமான நிலையில் இருந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தபாலகத்தின் முகடு விழும் நிலையிலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும் தபாலகத்தைச் சுற்றி பாதுகாப்பு சுவர்கள் இன்றியும் ஒரு பாலடைந்த இடம் போன்று காட்சி தருவதாக மக்கள் கவலைப்படுகின்றனர்.
இத் தபாலகத்தைச் சுற்றி வேலிகள் இல்லாததால் இப்பிரதேசத்திற்கு வரும் வாகனங்களின் தரிப்பிடமாக இந்த இடம் மாறியுள்ளதுடன் கட்டாக்காலி மாடுகள் தபாலக வளவுக்குள் புகுந்து நீர் குழாய்களை உடைத்து நாசமாக்கி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பிரதான தபாலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டி உடைந்து காணப்படுகின்றது. இங்குள்ள கிணறு குப்பை போடும் இடமாக மாறியுள்ளது.
இம்மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தி காணப்படல் வேண்டும். குறைகள் நிவர்த்திக்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களித்துவருகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கூட தபால் சேவைகள் அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அவரின் அதிகார காலத்தில் கூட சம்மாந்துறை, சாய்ந்தமருது போன்ற தபாலகங்களை நவீனப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள அவல நிலையில் இருந்து கொண்டிருக்கும் தபாகங்கள் விடயத்தில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் தபால் சேவைகள் அமைச்சர் என்ற பதவியில் மாத்திரம் இருந்துவிட்டார் என்றும் இம்மாவட்ட மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தற்போது இப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இம்மாவட்டத்தின் சாரதியும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!! என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். மாலைகளை அணிந்து கொண்டு வைத்திசாலைகளைப் பார்வையிடுகின்றார்கள். விளையாட்டு மைதானங்களை பார்வையிடுகின்றார்கள், பொன்னாடைகளை வாங்கிக்கொள்கிறார்கள், அடிக்கற்களையும் நடுகின்றார்கள். ஆனால், மக்கள் சேவைகளும் அபிவிருத்திகளும் திறப்பு விழாக்களும் இம்மாவட்டத்தில் நடப்பதாக இல்லையே என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment