பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால்
தேர்தல் பிற்போடப்படும்
– ஆணைக்குழு எச்சரிக்கை
எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தை எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி கூட்டுமாறு தாம் சபாநாயகரிடம் கோரவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பரப்புரைகள் முடிவடைந்த பின்னர், 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தல்களை பிற்போட வேண்டிய நிலை ஆணைக்குழுவுக்கு ஏற்படும் என்று பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், சுதந்திரமான, நீதியான முறையில் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment