அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை
உணரச் செய்வதற்காகவும்
வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய
கடமையை சரியாகச் செய்ய வைப்பதற்காகவும்
வாக்குகளைச் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் இது
கண்டியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை உணரச் செய்வதற்காகவும் வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்ய வைப்பதற்காகவும் வாக்குகளைச் சிந்தித்து பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் இது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கண்டி மாவட்டத்தில் இன்று 28 ஆம் திகதி காலை இடம்பெற்ற
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும்
கூறியதாவது,
மக்களுக்கு தற்பொது கிடைத்திருக்கும்
சந்தர்ப்பத்தை மிக அவதானமாகப் பாவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இப்பிரதேச மக்களுக்கு தீர்த்து வைக்கப்படாத பல பிரச்சினைகள் இருந்து
கொண்டிருப்பதாக எனக்கு இன்று இங்கு சொல்லப்பட்டது. இப்பிரதேசத்தில் மையத்தை
அடக்குவதற்கு இடமில்லை என்றும் எனக்கு சொல்லப்பட்டது. கல்வியை பெற்றுக் கொள்வதில்
பல பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்பிரததேசத்தில் வீடில்லாமலும். வாழ்வாதாரம் இல்லாமலும் பல தாய்மார்களும் சகோதரிகளும் கடும் கஷ்டத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் மாவட்டம் கண்டி மாவட்டமாகும்.
இங்கு கல்வியில் பின் தள்ளப்பட்ட நிலையில் எமது முஸ்லிம் சமூகம் இருந்து
கொண்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஒரு சமூதாயத்தின் முன்னேற்றம் கல்வியின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. கடந்த
காலங்களில் அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை உணரச் செய்வதற்காகவும் வாக்களித்த
மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை சரியாக செய்ய வைப்பதற்காகவும் உங்களின் வாக்குகளைச்
சிந்தித்து பாவிக்க வேண்டிய சந்தர்ப்பமே இதுவாகும்.
இப்பிரதேச மக்களாகிய நீங்கள் விரும்பினால் ஒன்றுபட்டு வாக்களித்து
எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள். கடந்த காலங்களில் நீங்கள் ஐக்கிய தேசியக்
கட்சிக்கு வாக்களித்திருக்கிறீர்கள். முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்திருக்கிறீர்கள்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொடுத்திருக்கிறீர்கள். இது போன்று ஏனைய கட்சியினருக்கும்
கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு வாக்குகளைக்
கொடுத்த இந்த மக்களுக்கு கிடைத்தது என்ன என்று கேள்வி கேட்டுப்பார்த்தால் அதற்கான பதில்
மக்களுக்கு நாம் சொல்லாமலே நன்கு தெரியும்.
ஒரு பிரதேச மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 5 வருட காலம்
போதும். எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகின்றன. ஆனால், நாம் தேர்தல்
காலங்களில் வாக்களிக்கின்ற மெஷின்களைப் போன்று வாக்களிக்கின்ற மக்களாக எமது காலங்களைக்
கழித்திருக்கின்றோம்.
நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்களாகிய உங்களின்
ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம். இந்த மக்களின் பிரார்த்தனையை (துஆ) எதிர்பார்க்கின்றோம்.
எங்களது கண்டிக்கான வருகை பலருக்கு பிரச்சினையாக உள்ளது. கூட்டங்களைப்
வைக்க வேண்டாம் என்று தடை செய்யக்கூடிய அளவுக்கு எமது குறுகிய கால பயணம் சிலருக்கு
அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.
நேற்று குருணாகலில் அதிகாலை 3.00 மணிக்கு அங்கு இடம்பெற்ற கூட்டத்தில்
கலந்து கொண்டேன். பெரும் திரளான மக்கள் அந்த நடுச்சாமத்திலும் காத்திருந்து எங்களின்
பேச்சுக்களுக்கு செவிமடுத்து கொண்டிருந்தார்கள். பல மணித்தியாலங்கள் அக்கூட்டத்திற்கு
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதித்துச் சென்றிருந்தேன். அவர்களுடைய கவலையைக்
கண்ணால் கண்டேன்.
அன்புச் சகோதரர்களே! எமது மக்களை அடிமை போன்று நடத்துகின்றார்கள்.
அராஜக அரசியலைச் செய்கின்றார்கள். அங்கு கல்வி அமைச்சர் மயில் சின்னத்திற்கு வாக்களித்தால்
தேசியப் பாடசாலையை இழுத்து மூடவேண்டியிருக்கும் எனக்கூறி அந்த மக்களை அச்சுறுத்தினாராம்.
இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதற்காக நாங்கள் பட்ட கஷ்டம் எம்மைப்
படைத்த அல்லாஹ்வுக்கு தெரியும். நன்றியுள்ளவர்கள் அதனை மறக்கமாட்டார்கள். அன்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை எமது மக்களுக்கு நன்கு தெரியாது. எமது மார்க்கத்திலும் பொருளாதாரத்திலும்
கைவைத்து அப்பாவி முஸ்லிம் சமூகத்தை அடக்க முற்பட்டதன் காரணமாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு மொத்தமாக நாம் வாக்களித்தோம்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
சட்டத்தை நிலை நிறுத்தாமல் ஞானசார தேரர் போன்றவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காததன்
காரணமாக அவர்களை மாற்ற முடியாது என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்தவர்களை எமது வாக்குப்பலத்தால்
அல்லாஹ்வின் உதவி கொண்டு வீட்டுக்கு அனுப்பிய சமூகம் நாங்கள். எங்களின் பலத்தால் ஆட்சி
அமைத்துள்ள அமைச்சிலுள்ள சிலர் இன்று எமது சமூகத்தை அச்சுறுத்துகிறார்கள்.
மக்களுக்கு தண்ணீர் தருவோம், பாடசாலைகளுக்கு கட்டடங்களைத்தருவோம்,
பாதைகளை அமைத்துத் தருவோம் என்று பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவைகளைச் செய்யாமல்
பொடுபோக்காக இருந்ததன் காரணமாகத்தான் நாங்கள் மக்கள் முன் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எங்களுடைய வருகை சிலருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியிலிருந்து மக்களைச் சந்திக்க நான் இங்கு வந்திருப்பது
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்வோ அல்லது மாகாண சபை உறூப்பினராக ஆக வேண்டும்
என்பதற்காகவோ அல்ல.
ஒரு சிறு வாக்குப்பலத்தை கொண்டுள்ள எனது பிரதேச மக்கள் 2001
ஆம் ஆண்டு அகதி முகாமில் இருந்த என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அந்த மக்கள்
தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள்.
இந்த மாவட்டத்திலுள்ள வாக்குப் பலத்தைவிட மூன்றில் ஒரு பங்குதான்
என்னுடைய மாவட்ட மக்களின் வாக்குகள் உள்ளன. அந்த குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை வைத்து
அந்த மக்கள் நன்றாகச் சிந்தித்து அரசியல் செய்ததன் காரணமாகத்தான் அங்குள்ள மக்கள் அதன்
பிரயோசனத்தை அனுபவிக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில்தான் நாடு முழுவதும் வாழும் எமது முஸ்லிம்
சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அந்த மக்கள் எங்களுக்கு களம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
எனவே, அமைச்சரவையின் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராக 5 பாராளுமன்ற
உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரு தூய்மையான எண்ணங்கள் கொண்ட ஒரு
அரசியல் கட்சியின் தலைவனாக மக்களைச் சந்தித்து கொண்டிருக்கின்றோம்.
எமது முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும்
முன்னேற்றம் காணப்படல் வேண்டும் அவர்களின் உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படல்
வேண்டும் என்ற நன்னோக்கில் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவர்களாக மக்களாகிய உங்கள்
முன் அரசியல் செய்ய வந்திருக்கின்றோம்.
கடந்த காலத்தில் சிலர் மக்களாகிய உங்கள் முன் வந்தார்கள் சிலரைக்
காணவில்லை., சிலர் இன்னும் இருக்கிறார்கள் ஆனால், சிலர் இங்கு வந்துதான் அரசியல் முகவரியைப்
பெற்றுக்கொண்டார்கள் அல்லது அரசியல் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார்கள். அப்படிப்பட்டவர்களோடு
ஒப்பிட்டு வீதிகளில் எங்களைப் பேசுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கின்றோம்.
மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களின் முன்னேறத்திற்காக
என்ன திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்? என்ன அபிவிருத்தி வேலைகளைச் செய்திருக்கிறார்கள்?
ஏனைய எமது சகோதரர்களின் பிரதேசங்களைப் போய் பாருங்கள் உண்மையைக் கண்டுகொள்வீர்கள்.
எமது சமுதாயம் எமது பிரதேசங்களில் பாதை இல்லை, பள்ளிக்கூடங்கள்
வசதிகளுடன் இல்லை, மையவாடிகள் இல்லை, வீடு வசதிகள் இல்லை, தொழில் வசதிகள், கைத்தொழிற்சாலை
வேண்டும் என்பன போன்றவைகளை தேர்தல் காலத்தில் மாத்திரம் கேட்கின்ற
சமூகமாக எமது முஸ்லிம் சமூகம் இருக்கக்கூடாது. இன்று பல இடங்களிலும் இவ்வாறான நிலைமையைத்தான்
நாம் பார்க்கின்றோம்.
தேர்தல் முடிந்தால் மக்களால் வாக்களித்து தேர்த்தெடுக்கப்பட்டவர்களைக்
காணமுடியாது அல்லது மக்களின் தேவைகளை அறிந்து திட்டமிட்டுச் செய்யமாட்டார்கள். இதனால்தான்
தேர்தல் வரும் காலத்தில் பிரதேசத்தின் குறைகளை மக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மாறாக மக்களுக்கு எதைச் செய்யவேண்டுமோ அதனைத் திட்டமிட்டு
செய்கின்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயல்படும். சிலர் உங்களை இல்லாத
பொல்லாத கதைகளைக் கூறி நடிகர்கள் போல நாடகமாடி ஏமாற்ற வருவார்கள் ஏமாந்து விடாதீர்கள்.
சிலர் எங்களைப் பார்த்து இனவாதிகள் என்று சொல்கிறார்கள். நாங்கள்
இனவாதிகள் அல்ல, மதவாதிகளும் அல்ல. இவர் கலவரத்தைத் தூண்ட வந்திருக்கிறார் எனச் சிலர்
கதைகளைக் கூறுகின்றார்களாம். இனங்களுக்கிடையே பிரச்சினையை உண்டுபண்ண வந்திருக்கின்றார்
என்றும் கூறுகின்றார்களாம். நாங்கள் நிச்சயாமாக அப்படிப்பட்டவர்கள் அல்ல. இந்த நாட்டில்
மிகவும் அமைதியான, ஒற்றுமையான ஜனநாயகத்தை நம்பிய சமூகம்தான் இலங்கை முஸ்லிம்கள்.
ரீ.பி. ஜாயா தொடக்கம் எம்.எச்.எம்.அஷ்ரப் வரை எல்லோரும் முஸ்லிம்களுக்கு
ஜனநாயகத்தைப் போதித்தவர்கள். இந்த நாட்டில் சிங்கள சமூகம் ஜேவிபி காலத்தில்
ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வரலாறு இருக்கின்றது.
வடக்கு கிழக்கில் தமிழ் சகோதரர்கள் நாட்டை இரண்டாகப் பிரித்து எங்களுக்குத்
தாருங்கள் எனக் கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடி எத்தனையோ அழிவுகளை இந்த நாடு
சந்தித்தது.
அன்புச் சகோதர்களே! முஸ்லிம்களாகிய எங்களை அழித்த போதும் எங்கள் மக்களை சுட்ட போதும் வெட்டிய போதும் வாழைச்சேனையில் எங்கள்
சகோதரர்களின் மையத்தை அடக்கம் செய்வதற்குக் கூட தராமல் எங்கள் கண்ணுக்கு முன்னால்
எரித்த போதும் ஒரு பாவமும் செய்யாத ஒரு இலட்சம் முஸ்லிம்களை துரத்திய போதும் பொருட்கள்
எதனையும் எடுக்கவிடாது இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றிய போதும் காத்தான்குடியில்
எமது சகோதரர்கள் பள்ளிவாசலில் சுஜுதில் இருக்கும்போது
நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுத்தள்ளிய போதும். எமது பள்ளிவாசல்களை உடைத்த போதும்,
நாங்கள் இதற்கு எதிராக ஒரு போதும் ஆயுதங்கள் ஏந்தவில்லை.
நாங்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் அல்ல. இதற்காக இனவாதத்தை
தூண்டியவர்களும் அல்ல. எமது மார்க்கமாகிய இஸ்லாம் போதித்த வகையில் உலமா சபைகளுக்கு
கட்டுப்பட்டவர்களாக முஸ்லிம் சமூகம் மிகவும் மென்மையான தன்மையோடு
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு துஆக்களை எமது தளமாகக் கொண்டவர்களாக கடந்த
காலங்களில் செயல்பட்டு அமைதிகாத்து வந்திருக்கின்றோம்.
எமது வாக்குப் பலத்தால்தான் மஹிந்த ராஜ்பக்ஸவுக்கு உரிய தண்டனையை வழங்கினோம். . இவ்வாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சமூகத்தைச்
சேர்ந்தவனான என்னை எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க வேண்டிய இடங்களில் தட்டிக் கேட்பதைப் பார்த்துதான் இனவாதி என்று என்மீது
ஆத்திரப்படுகின்றார்கள்.
நாங்களும் மற்ற அமைச்சர்களைபோல் வாய் பேசாமல் ஊமையர்கள் போல கண்டும்
காணாதவர்கள் போல விடயங்களைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல எமது முஸ்லிம் சமூகத்தை
அடக்கி அடக்கி அடிமைப்படுதப்படுகின்ற போது பள்ளிவாசல்களை உடைக்கின்ற போது எமது
மக்களின் சொத்துக்களை அழிக்கின்ற போது நாங்களும் தட்டிக் கேட்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காகவேதான் என்னைப் பார்த்து இனவாதி என்று கூறுகின்றார்கள்.
மற்றவர்களைப் போல் நானும் அமைதியாக இருக்க வேண்டும். என்பதுதான் அவர்களின்
எதிர்பார்ப்பு என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, மக்களாகிய நீங்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். உங்களின்
வாக்குகளை உண்மையின் பக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
தெரிவித்தார்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment