கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில்

40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு

559 பேர் களத்தில்



எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 559 பேர் களத்தில் குதித்துள்ளனர்.
இம் மாநகர சபைக்கு 23  வட்டாரங்களிலிருந்து வட்டார ரீதியாக 24  உறுப்பினர்களும்  மேலதிக வேட்பாளர்களிலிருந்து 16  உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள்.
559 வேட்பாளர்களில் 413 பேர் முஸ்லிம்கள் 140 பேர் தமிழர்கள் 6 பேர் சிங்களவர்கள் என அடங்கியுள்ளனர்.
இங்கு 9 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை ஆகியன போட்டியிடும் அரசியல் கட்சிகளாகும்.
இத்தேர்தலில் 74,946 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சாய்ந்தமருதில் 19,306 வாக்காளர்களும், கல்முனை தமிழ் பிரிவில் 20,866 வாக்காளர்களும், கல்முனை முஸ்லிம் பிரிவில் 18,457 வாக்காளர்களும் மருதமுனையில் 12,682 வாக்காளர்களும் நற்பிட்டிமுனையில் 3,635 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
19 ஆசனங்களைக் கொண்டிருந்த இம்மாநகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 9,911 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  8,524 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2,805 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த தேர்தலில் 68,198 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 46,580 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர். 948 பேர் அளித்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
ஏ.எல்.ஜுனைதீன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top