முஸ்லிம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட கட்சி

அதனைச் சரியாக செய்யாததன் காரணமாகத்தான்

இன்னொரு கட்சியை அமைக்க வேண்டிய

தேவைப்பாடு எங்களுக்கு ஏற்பட்டது.

அதிர்வு அரசியல் கலந்துரையாடலில் அமைச்சர்  ரிஷாத்



17 வருடங்களாக அம்பாறையிலுள்ள பிரதேசங்களுக்கு சரியாக வருகைதராதவர், மக்களின் அபிவிருத்தி பற்றி பேசாதவர், அபிவிருத்தி செய்யாதவர், எங்களை வந்து சந்திக்காதவர், தொலைபேசியில்  தொடர்பு கொள்ளாதவர். நாங்கள் தேடிப்போனாலும் சந்திக்க முடியாதவர் இன்று அடிக்கடி அம்பாறைக்கு ஓடி வருகின்றார். இதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது இதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அங்குள்ள மக்கள் என்னிடம் கூறினார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகவியலாளரால்  கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில் தெரிவித்தார்.
இந்த அரசியல் கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாத் கருத்து தெரிவிக்கையில்,
என் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஒரு வீடோ, ஒரு மலசல கூடமோ, ஒரு பாடசாலையோ அந்தப்பகுதியில் கட்டாதவர்கள் அங்கு 74 பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருந்தன. எல்லாப் பள்ளிவாசல்களும் கட்டப்பட்டுவிட்டன. பாடசாலைகளுக்கான  கட்டடங்கள் கட்டப்பட்டு எல்லாப் பாடசாலைகளும் இயங்குகின்றன. ஆனால், அந்த மக்களுக்கு இன்னும் பல தேவைகள் உள்ளன.
முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இன்னும் ஒரு துண்டுக் காணிகூட கொடுக்கப்படவில்லை. அந்தப் பிரதேச மக்களின் பிரச்சினை வித்தியாசமானது. ஏனைய மன்னார், வவுனியா மாவட்டங்களில் எங்களால் செய்யக் கூடியதைத் திட்டமிட்டுச் செய்திருக்கின்றோம்.
முஸ்லிம் சமூதாயத்தின் உரிமைபற்றி கருத்து தெரிவிக்கையில்
முஸ்லிம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதனைச் சரியாக செய்யாததன் காரணமாகத்தான் இன்னொரு கட்சியை அமைக்க வேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு ஏற்பட்டது. அந்தக் கட்சி தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக விலைபேசி விற்கின்ற அது போன்று வெளிநாட்டு சக்திகளுக்கு விலை போகின்ற கட்சியாக உள்ளது. இதனால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூதாயத்தின் நிலை நாளை கேள்விக்குறியாகி விடுமோ என்ற பாரிய சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
அதன் காரணமாகத்தான் அந்த நிலையிலிருந்து முஸ்லிம் சமூதாயத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் ஒரு கட்சியை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அபிவிருத்தி என்பதும் அந்தப் பிரதேச மக்களின் உரிமைதான். சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த மண்ணில் கொண்டு போய் மீண்டும் குடியேற்றுவது அதனை எதிர்ப்பவர்களோடு எதிர்த்து போராடுவது அதனை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும்போது அதற்கும் முகம் கொடுப்பது அந்த மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து அந்த மக்களைப் பாதுகாப்பது என்பதும் சமுதாயத்தின் உரிமை என்று சொல்கின்ற விடயங்களில் அடங்கும்.
அதேபோன்றுதான் நாளை ஒரு அடிமை விலங்கு முஸ்லிம் சமுதாயத்தின் மீது இடப்படக்கூடிய ஆபத்து எங்கள் கண் முன்னால் தெரிகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அந்த ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் இந்தக் கட்சியின் அவசியம் எங்களுக்கு உணரப்படுகின்றது.
எனது வன்னி மக்கள் எனக்கு வாக்களித்து என்னை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கியுள்ளார்கள். ஏனைய பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று அந்த நிலையை அடைய வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் பயணிக்கும் பாதை அல்லாஹ்வுக்காக சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தியாக மனப்பாணமையுடனான பயணமாகும். தூங்குவதற்கு கூட உரிய நேரத்திற்கு தூங்க முடிவதில்லை அந்தளவுக்கு எமது முழு நேரத்தையும் எமது சமுதாயத்திற்காக செலவிடுகின்றோம். சீரோவில் இருந்துதான் எங்களது இந்தக் கட்சியை ஆரம்பித்தோம்.
முஸ்லிம் காங்கிரஸுக்கு என ஒரு எட்டு மாடிக் கட்டடத்தை பெரும் தலைவர் அஷ்ரப் கட்டி வைத்தார். கட்சியின் ஒரு பெரிய கட்டமைப்புடன் அதாவது 13 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிவிட்டுத்தான் அன்னாரை அல்லாஹ் எடுத்துவிட்டான்.
அந்த இடத்தில் இருந்துதான் சகோதரர் ஹக்கீம் அவர்கள் கட்சியின் தலைமைப் பதவியை எனது நப்ஸ் கேட்கின்றது அந்தத் தலைமைத்துவத்தை எனக்குத் தாருங்கள் எனக்கேட்ட பிறகுதான் சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் மக்களின் ஆதரவைக்காட்டி அதை ஏற்று உயர்பீடத்தின் மூலம் அவர் தலைவரானார்.
அந்த இடத்திலிருந்து சமூதாயத்திற்குச் சரியாகச் செய்ய வேண்டியவைகளை அவர் சரியாகச் செய்யவில்லை வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளத்தில் இருந்தபோதும் சரியாக அந்த மக்களைக் கவனிக்கவில்லை. அவர்கள் மீள் குடியேறியபோதும் கவனிக்கப்படவில்லை.
கிழக்குச் சென்று அந்த மக்களின் நிலைமைகளை நாம் பார்க்கும்போது அங்குள்ள மக்களின் நிலைமையும் மிகப் பரிதாபகரமாக உள்ளது. அரசியல்வாதிகள் போகாத இடம் கூட அங்கிருக்கிறது. அந்த மக்களை நாம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம்.
அந்த மக்களுக்குத் தேவையான பாதைகளை அமைத்துக் கொடுப்பதும் அவர்களுக்கான உரிமை. கிழக்கு மாகாண மக்கள் பல தேவைகளைப்   நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இவைகளுக்கு  எல்லாம் ஒரு படி மேலாக  தீர்வுத் திட்டம் இருக்கின்றது.இந்த தீர்வுத் திட்டத்தில் ஒரு ஒழுங்கான நிலைப்பாடு இல்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது. தீர்வுத்திட்ட நகல் வெளியே வந்தது அந்த தீர்வுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். அதில் நாங்கள் எங்கள் கருத்தை ஆணித்தரமாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் சொல்லவில்லையென்றால் கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் நாளை ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்தவர்களாக தமிழ் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதேமாதிரியான நிலைக்கு இந்த அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை இல்லாமல் இன்னும் பத்து அல்லது இருபது வருடங்களுக்குப் பின்னர் ஒரு ஆபத்தான நிலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிவிடும் என அஞ்சுகின்றோம்.
எனவேதான்  எதிர்கால முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கும் எமது சமுதாயத்தை மொத்தமாக விலை பேசி அடிமைச் சாசனம் எழுதப்படுவதைத் தடுப்பதற்காகவும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியாளர்களிடம் விலை பேசுவதைத் தடுப்பதற்காகவும் நாங்கள் கட்சியை உருவாக்கினோம். குறுகிய காலத்தில் உருவாக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று சிலருக்கு சவாலாக மாறியுள்ளது.
இந்தப் பயணத்தில் நாங்கள் நேர்மையாகப் பயணிக்கின்றோம். பெரிய கட்டமைப்போடு இருந்த ஒரு கட்சியோடு போட்டி போடுகின்ற அளவு நாங்கள் வளர்ந்துள்ளோம்.
17 வருடங்களாக அம்பாறைப் பிரதேசங்களுக்கு சரியாக வருகைதராதவர், இந்த மக்களின் அபிவிருத்தி பற்றி பேசாதவர், அபிவிருத்தி செய்யாதவர், எங்களை வந்து சந்திக்காதவர், தொலைபேசியில்  தொடர்பு கொள்ளாதவர். நாங்கள் தேடிப்போனாலும் சந்திக்க முடியாதவர் இன்று அடிக்கடி அம்பாறைக்கு ஓடி வருகின்றார். இதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய கட்சி செய்துள்ளது இதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அங்குள்ள மக்கள் என்னிடம் கூறினார்கள். எங்களுடைய வருகை மூலம் அந்த மக்கள் தெளிவோடு இருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்ட மக்கள் அரசியலில் தெளிவடைந்துள்ளார்கள். அது எங்களுக்கு நன்றாகத் தெரிகின்றது. அங்குள்ள கல்விமான்கள் எங்கள் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள்.
கட்சி ஒரு மார்க்கம் என்ற மாயையில் இருந்தார்கள் அந்த நிலையிலிருந்து அந்த மக்கள் விடுபட்டிருக்கிறார்கள். இன்று தெளிவை நோக்கிப் பயணிக்கிறார்கள். அந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் அம்பாறையிலும் திருக்கோணமலையிலும் அதிக பட்ச சபைகளை நாம் வெல்கின்ற வாய்ப்பு உள்ளது இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிர்வு அரசியல் கலந்துரையாடலில் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதுவித பதட்டம் அடையாமலும் ஏனைய ஒரு சில அரசியல்வாதிகள் போன்று சொற்களை விழுங்காமலும் வார்த்தைகளைத் திருப்பி திருப்பிக் கூறி காலத்தைக் கடத்தாமலும் கோபப்பட்டு மேசையில் அடிக்காமலும் நிதானமாக அனைத்துக் கேள்விகளுக்கும் தைரியமாகவும் துணிச்சலாகவும் பதிலளித்துப் பேசியது கண்டு பலரும் அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top