நான் இனவாதியுமல்ல மதவாதியுமல்ல

சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது

தட்டிக் கேட்பவன்

கண்டியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

நான் இனவாதியுமல்ல மதவாதியுமல்ல எமது முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது அதற்கு எதிராகத் தட்டிக் கேட்க வேண்டிய இடங்களில் தட்டிக் கேட்பதைப் பார்த்துதான் இனவாதி என்று என்னைப்பார்த்து ஆத்திரப்படுகின்றார்கள் என கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குறணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில், தனித்துக் களமிறங்கியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
உடுதெனிய, தெல்தொட்ட, கஹடபிடிய, கலிகமுவ, தெல்லங்க, படுபிடிய, அம்பரபொல, வெலம்பொட, குறுக்குத்தல, தெஹியங்க, உக்ரஸ்பிட்டிய, இனிகல, உடதலவின்ன ஆகிய இடங்களில்  கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். 
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது,
சிலர் ங்களைப் பார்த்து இனவாதிகள் என்று சொல்கிறார்கள். நாங்கள் இனவாதிகள் அல்ல, மதவாதிகளும் அல்ல. என்னைப்பார்த்து இவர் கலவரத்தைத் தூண்ட வந்திருக்கிறார் எனச் சிலர் கதைகளைக் கூறுகின்றார்களாம். இனங்களுக்கிடையே பிரச்சினையை உண்டுபண்ண வந்திருக்கின்றார் என்றும் கூறுகின்றார்களாம். நாங்கள் நிச்சமாக அப்படிப்பட்டவர்கள் அல்ல. இந்த நாட்டில் மிகவும் அமைதியான, ஒற்றுமையான ஜனநாயகத்தை நம்பிய சமூகம்தான் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள்.
ரீ.பி. ஜாயா தொடக்கம் எம்.எச்.எம்.அஷ்ரப் வரை எல்லோரும் முஸ்லிம்களுக்கு ஜனநாயகத்தைப் போதித்தவர்கள். இந்த நாட்டில் சிங்கள சமூகம் ஜேவிபி காலத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வரலாற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
அதேபோன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் சகோதரர்கள் நாட்டை இரண்டாகப் பிரித்து எங்களுக்குத் தாருங்கள் எனக் கேட்டு தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி எத்தனையோ அழிவுகளை இந்த நாடு சந்தித்ததையும் இந்த நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது.
முஸ்லிம் மக்களாகிய எங்களுக்கு எவ்வளவு அழிவுகள் வந்த போதும் முஸ்லிம் மக்களை துப்பாக்கியால் சுட்ட போதும் கத்தி, வாள்கள், கோடரிகள் கொண்டு வெட்டிய போதும் வாழைச்சேனையில் முஸ்லிம் சகோதரர்களின் மையத்தை அடக்கம் செய்வதற்குக் கூட தராமல் எங்கள் கண்ணுக்கு முன்னால் தீயிட்டு எரித்த போதும் ஒரு பாவமும் செய்யாத ஒரு இலட்சம் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய போதும் பொருட்கள் எதனையும் எடுக்கவிடாது இருப்பிடங்களைவிட்டு துரத்திய போதும் காத்தான்குடியில் எமது முஸ்லிம் சகோதரர்கள் பள்ளிவாசலில் சுஜுதில் இருக்கும்போது நூற்றுக்கணக்கில் சுட்டுத்தள்ளிய போதும். எமது பள்ளிவாசல்களை உடைத்த போதும், நாங்கள் இதற்கு எதிராக ஒரு போதும் ஆயுதங்கள் ஏந்தவில்லை.
நாங்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் அல்ல. இதற்காக இனவாதத்தை தூண்டியவர்களும் அல்ல. எமது மார்க்கமாகிய புனித இஸ்லாம் போதித்த வகையில் உலமா சபைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக  முஸ்லிம் சமூகம் மிகவும் மென்மையான தன்மையோடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு துஆக்களை எமது தளமாகக் கொண்டவர்களாக கடந்த காலங்களில் செயல்பட்டு அமைதி காத்து வந்திருக்கின்றோம்.
எமது வாக்குப் பலத்தால்தான் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்புக்கள் இடம்பெற்றபோது பாராமுகமாக இருந்ததற்காக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இதுதான் எங்களால் உங்களுக்கு வழங்கும் தண்டனை என்று எமது வாக்குப் பலத்தைக் கொண்டு உரிய தண்டனையை வழங்கினோம். . இவ்வாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சமூகத்தைச் சேர்ந்தவனான என்னை எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க வேண்டிய இடங்களில் தட்டிக் கேட்பதைப் பார்த்துதான் இனவாதி என்று என்மீது ஆத்திரப்படுகின்றார்கள்.
நாங்களும் மற்ற அமைச்சர்களைபோல் வாய் பேசாமல் ஊமையர்கள் போல கண்டும் காணாதவர்கள் போல விடயங்களைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல எமது முஸ்லிம் சமூகத்தை அடக்கி அடக்கி அடிமைப்படுதப்படுகின்ற போது பள்ளிவாசல்களை உடைக்கின்ற போது எமது மக்களின் சொத்துக்களை அழிக்கின்ற போது நாங்களும் தட்டிக் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவேதான் என்னைப் பார்த்து இவர் ஒரு இனவாதி என்று கூறுகின்றார்கள். மற்றவர்களைப் போல் நானும் அமைதியாக இருக்க வேண்டும். என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வன்னியிலிருந்து மக்களைச் சந்திக்க நான் இங்கு வந்திருப்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதற்வோ அல்லது மாகாண சபை உறூப்பினராக ஆக தெரிவாக வேண்டும் என்பதற்காகவோ அல்ல.
ஒரு சிறு வாக்குப்பலத்தை கொண்டுள்ள எனது பிரதேச மக்கள் 2001 ஆம் ஆண்டு அகதி முகாமில் இருந்த என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அந்த மக்கள் தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)
இந்த மாவட்டத்திலுள்ள வாக்குப் பலத்தைவிட மூன்றில் ஒரு பங்குதான் என்னுடைய மாவட்ட மக்களின் வாக்குகள் உள்ளன. அந்த குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை வைத்து அந்த மக்கள் நன்றாகச் சிந்தித்து அரசியல் செய்ததன் காரணமாகத்தான் அங்குள்ள மக்கள் அதன் பிரயோசனத்தை அனுபவிக்கின்றார்கள்.
அதன் அடிப்படையில்தான் நாடு முழுவதும் வாழும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு அந்த மக்கள் எங்களுக்கு களம் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
அமைச்சரவையின் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரு தூய்மையான எண்ணங்கள் கொண்ட ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக மக்களைச் சந்தித்து கொண்டிருக்கின்றோம்.
எமது முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் காணப்படல் வேண்டும் அவர்களின் உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற நன்னோக்கில் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்தவர்களாக மக்களாகிய உங்கள் முன் அரசியல் செய்ய வந்திருக்கின்றோம்.
ஒரு பிரதேச மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 5 வருட காலம் போதும். எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் ஆகின்றன. ஆனால், நாம் தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற மெஷின்களைப் போன்று வாக்களிக்கின்ற மக்களாக எமது காலங்களைக் கழித்திருக்கின்றோம்.
நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்களாகிய உங்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம். இந்த மக்களின் பிரார்த்தனையை (துஆ) எதிர்பார்க்கின்றோம். மக்களாகிய நீங்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். உங்களின் வாக்குகளை உண்மையின் பக்கம் அளிக்க வேண்டும்என விரும்புகின்றோம். இப்பிரதேச மக்களாகிய நீங்கள் ஒன்றுபட்டு வாக்களித்து எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள். இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்
.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top