உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்
உறுப்பினர்களின் நியமனம்
இன்றைய கூட்டத்தில் முடிவு
புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், 25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர், “சட்டத்தின்படி, உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பிரதிநிதித்துவம் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.
இம்முறை தேர்தல் முடிவுகள் வழக்கத்துக்கு மாறான முறையில் அமைந்திருப்பதால், 25 வீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதில் சட்டரீதியான தடைகள் உள்ளன.
சில சபைகளில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகள். 20 வீத வாக்குகளையும், 3 இற்கும் குறைவாக உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றன. இதனால், விகிதாசார முறையில் பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. எனவே, உள்ளூராட்சி சபை தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
எனினும், அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டாலும் கூட அது அடுத்த தேர்தலில் தான் நடைமுறைக்கு வரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டார முறையில் ஆண்களே பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், விகிதாசார முறையின் கீழேயே, பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், 2 இற்கும் குறைவான பிரதிநிதிகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் பெண் வேட்பாளர்களையே நியமிக்குமாறு வலியுறுத்த முடியாது என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால், பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையே, உள்ளூராட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு, இந்த வாரத்துக்குள் குறித்த கட்சிகளுக்கு அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.
“புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மார்ச் 6ஆம் திகதி கூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், அது பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
நியமன உறுப்பினர்களின் பட்டியலை கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விரைவாக இந்தப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் தான், வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களுடன் அதனையும் வர்தமாணியில் வெளியிட முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment