இலங்கையின் 70 வது சுதந்திர தினம்

சாய்ந்தமருதுமாளிகைக்காடு

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில்

வெகு விமரிசையாக இடம்பெற்ற நிகழ்வுகள்

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரின்  தலைமையில் இடம்பெற்ற இலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வில் நாட்டிற்காகவும் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டில் வளமான சுபீட்சம் அமைதியான சுதந்திரமான ஒற்றுமையான சூழல் ஏற்படவும்  விசேட துப் பிரார்த்தனை இடம்பெற்றது.
மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான நாட்டின் தேசியக் கொடி ஏந்திய மக்களின் ஊர்வலம் சாய்ந்தமருது மக்களின் பாரம்பரிய பொல்லடி, பாவா பைத், பாடசாலை மாணவர்களின் பங்களிப்புகளுடன் சாய்ந்தமருது ஜுஆப் பெரிய பள்ளிவாசல் வரை இடம்பெற்றது
சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு கௌரவத்தையும் மதிப்பையும் வழங்கியுள்ள இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நல்லாட்சி அரசுக்குக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளிவாசல் வளாகத்தினுள் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் சாய்ந்தமருதுமாளிகைக்காடு பிரதேசம் எங்கும் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.
சாய்ந்தமருதிலுள்ள பிரதான வீதி உள்ளுர் வீதி வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வங்கிகள் பாடசாலைகள் வீடுகள் வாகனங்கள் என்பனவற்றில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இளைஞர்கள் தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் சாய்நதமருது பிரதான வீதி வழியாகவும் உள்ளுர் வீதி வழியாகவும் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிகள் மூலமாக ஊர்வலமாகவும் சென்றனர்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஏ.எல்.மைமூனா, அம்பாறை இராணுவ அதிகாரி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) விஷேட துஆப் (பிரார்த்தனை) செய்தார்.
எமது இலங்கை நாட்டின் 70ஆவது சுதந்திரதினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபா நாணயத் தாளில் சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் படம் பொறிக்கப்பட்டு சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேச மக்களையும் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தையும் நல்லாட்சி அரசு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.ஜுனைதீன்



























0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top