எகிப்து ஜனாதிபதியாக 
அப்துல் சிசி மீண்டும் தெரிவு
2022-ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்.
   
எகிப்து நாட்டின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப் பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தேர்தலில் ஜனாதிபதி அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார்.
முதல் 2 நாள் நடந்த தேர்தலில் வாக்குப் பதிவு மிக குறைவாக இருந்தது. இதனால் வாக்கு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆனாலும், வாக்குப் பதிவு அதிகமாக நடக்கவில்லை. வாக்குப் பதிவு குறைவாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதிக்கு தோல்வி ஏற்படலாம் என கருதினார்கள்.
எனவே, ஜனாதிபதி தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதே போல் எதிர்க்கட்சிகளும் பணம் கொடுத்தன. ஆனாலும் கூட வாக்குப் பதிவு தொடர்ந்து மந்தமாகவே இருந்தததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில் தற்போதைய ஜனாதிபதி அப்துல் சிசி பதிவான வாக்குகளில் சுமார் 97 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் 2022-ம் ஆண்டு வரை அவர் எகிப்து நாட்டின் ஜனாதிபதி பதவியில் நீடிப்பார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top