4 வருடங்களுக்கு முன்  ஓர் அனுபவம்........
இருதய நோய் ஏற்பட்டால்........



அதிபர்கள், ஆசிரியர்களால் நல்ல டாக்டர்கள்,நல்ல வழக்கறிஞர்கள் நல்ல பொறியியலாளர்கள் ஆகியோர்களை உருவாக்க முடியும். இது நல்லதொரு விடயம். ஆனால் நல்ல பிரஜைகளை, மனிதாபிமானம் உள்ளவர்களை எப்படி உருவாக்குவது? என்றொரு கேள்வியை அதிபர்கள் மத்தியில் எழுப்ப விரும்புகின்றேன்.
நல்ல டாக்டர்கள் என்பதும் நல்ல வழக்கறிஞர்கள் என்பதும் நல்ல பொறியியலாளர்கள் என்பதும் நல்ல பிரஜைகள் மனிதாபிமானம் உள்ளவர்கள் என்பதாகாது. இதுதான் இன்று எம்மிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினையாகும்.
மனித மனங்களைப் பின்னிப்பிணைத்து அவர்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் உகந்த நல்ல பிரஜைகளாகவும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் உருவாக்குகின்ற கல்வியைப் பற்றி சிந்தித்து அதற்கான நற்பணியில் ஈடுபட அதிபர்கள், ஆசிரியர்கள் தமது கடமைக்கு அப்பால் சேவையாற்ற முன்வர வேண்டும்”.
இக்கருத்தை மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சுமார் முன்னூறுக்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம், தமிழ் அதிபர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்திருந்தார்.
அன்னாரின் இக்கருத்து எவ்வளவுக்கு உண்மையானது என்பதை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமை செய்யும் ஒரு சில டாக்டர்களின் நடவடிக்கைகளிலிருந்து எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
கொழும்பில் அரச வைத்தியசாலைகளில் கடமை செய்யும் டாக்டர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர்களுடனும் நோயாளியைப் பார்வையிடச் செல்லும் நோயாளியின் உறவினர்களுடனும் எவ்வாறு மனிதத் தன்மையுடனும் இரக்கத்துடனும் பழகுகின்றார்கள் என்பதைப் பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எமக்குத் தெரிகின்றது.
இது விடயத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள எல்லா டாக்டர்களையும் நாங்கள் குற்றம் காணவில்லை குறிப்பிடவுமில்லை. அடக்கமான மானிட பண்புகள் உள்ள மரியாதைமிக்க பல டாக்டர்கள் கிழக்கு மாகாணத்தில் கடமை செய்கின்றார்கள். அவர்களை பாராட்டுகின்றோம், மதிக்கின்றோம், வாழ்த்துகின்றோம்.
 கொழும்பில் கடமை செய்யும் டாக்டர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் செய்கின்ற சேவை உண்மையில் மானிட தன்மையுடன் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று பாராது அவர் ஒரு நோயாளி என்பதை மட்டும் கவனித்தில் கொண்டு சுறுசுறுப்பாகச் செய்கின்ற சேவையை ஒரு பெரும் சேவையாகவே  காணக்கூடியதாக இருந்தது.  அதனை நேரில் கண்டேன்.
இச்சந்தர்ப்பத்தில் எனது சகோதரருக்கு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மார்ச் 30 ஆம் திகதி அதிகாலை திடீரென எனது சகோதரருக்கு இதய நோய் வந்துவிட்டது. இவர் கிழக்கு மாணத்தில் உள்ள பிரபலமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சுமார் எட்டு நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை வழங்கும் டாக்டரை சரியாகச் சந்தித்து குடும்பத்தவர்களால் விளக்கம் பெற முடியவில்லை. அப்படி பிஸியாகக் காணப்பட்டாராம்.
நோயாளியை கொழும்பு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டியுடன் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று குடும்பத்தவர்களால் கேட்கப்பட்டது. அதற்கு அவ்வைத்தியசாலையில் அப்படி அம்புலன்ஸ் வண்டி தர முடியாது கொழும்பு கொண்டு செல்வதானாலும் புதன்கிழமையே (09.04.2014) அனுமதிக்கப்படும் என்றும் பதிலளிக்கப்பட்டதாம்.
சரியானவர்களிடம் சரியான முறையில் நோயாளியைப் பற்றி  தகவல்கள் பெற முடியாததால் உரிய டாக்டரைச் சந்தித்து விளக்கத்தைப் பெறுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். வைத்திசாலையில் குறித்த டாக்டரை விசாரித்துள்ளனர். உரிய டாக்டர் தற்போது பிரத்தியேகமாக வைத்தியம் செய்து கொண்டிருக்கின்றார். உடனடியாக அந்த பிரத்தியேக இடத்திற்குச் சென்று பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நோயாளியின் குடும்பத்தவர்கள் சந்திக்க முடியாமல் இருக்கும் இந்த டாக்டரை இவ்விடத்தில் தவற விட்டால் சந்திக்க முடியாது போய்விடும் எனக் கருதி அங்கு பணத்தைச் செலுத்தி டாக்டரைக் காணச் சென்றுள்ளனர். டாக்டரை இவ்வாறு சந்திக்கச் சென்றவர்களில் ஒருவர் பொறியியலாளர் மற்றொருவர் வைத்தியசாலை அமைந்துள்ள நகரத்தில் அரச நிறுவனம் ஒன்றில் கடமை செய்பவர். தன்னைக்காண வந்துள்ளவர்கள் வைத்தியத்திற்கு வந்துள்ளவர்கள் என்ற அடிப்படையில் டாக்டர் ஆறுதலாக அவர்களிடம் விசாரித்துள்ளார்.  டாக்டரைச் சந்திக்கச் சென்ற நோயாளியின் குடும்பத்தினர் டாக்டரைப் பார்த்து உங்களைச் சந்திப்பதற்கு வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை இப்படி பணம் செலுத்தி வந்துவிட்டோம்.எனக்கூறி நோயாளியைப் பற்றி விசாரித்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும். கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு அனுமதியுங்கள் என்று பேசியுள்ளனர்
இதற்குப் பிறகு அந்த டாக்டர் மானிடதன்மைமிக்க டாக்டராக இருக்கவில்லையாம். பதில் சரியாகச் சொல்லாமல் சீறிப் பாய்ந்தாராம். இவர் மாத்திரமா? நாங்கள் எத்தனை பேரைப் பார்க்க வேண்டும் என்று கடிந்தாராம். புதன்கிழமைக்கு முன் அவரை கொண்டு செல்லமுடியாது என்றும் சொன்னாராம்.
படித்து பொறுப்புள்ள உத்தியோகம் பார்ப்பவர்களிடம் இவ்வாறு சீறிப் பாய்ந்து கதைக்கும் போது மற்றவர்களுக்கு நிலமை எப்படி இருக்கும்?
டாக்டரைக் காணச் சென்றவர்கள் பணத்தைக் கட்டியும் எதுவித பிரயோசனமும் இல்லை அவர் கடிந்து கொண்டதுதான் மிச்சம் என்று நினைத்தவர்களாக அமைதியாகத் திரும்பிவிட்டனராம்.
கொழும்பில் இருந்த எனக்கு இவைகள் தெரிவிக்கப்பட்டன. நோயாளியை கொழும்புக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அம்புலன்ஸ் வண்டியை அவர்கள் தராவிட்டாலும் பிரத்தியேக அம்புலன்ஸ் வண்டியை ஒழுங்கு செய்து கொழும்புக்கு அவசரமாக கொண்டு வாருங்கள் என்று கூட கூறியிருந்தேன்
அதன் நிமிர்த்தம் வைத்தியசாலையில் நோயாளியைக் கேட்டபோது ( 9.4.2014 ) புதன்கிழமைதான் அவரைப் பார்த்து தரமுடியும் என்று கூறியுள்ளனர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் எதற்கும் நோயாளியைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து அவசரமாக 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கொழும்பில் இருந்து புறப்பட்டு பொலன்னறுவைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு வந்தடைந்தோம். அங்கு வைத்து எங்களுக்கு தொலைபேசி மூலம் நோயாளியை வைத்தியசாலை அம்பியுலன்ஸ் வண்டியில் ஒரு டாக்டர், தாதிய உத்தியோகத்தர் ஆகியோர்களின் உதவியுடன் பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்புக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று தகவல் தரப்பட்டது.
 9 ஆம் திகதிதான் ஆளைத்தருவோம் அம்புலன்ஸ் வண்டி தர முடியாது என்று கண்டிப்பாகக் கூறியவர்கள் 6 ஆம் திகதியே இப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு என்ன நடந்துவிட்டது?
நோயாளியைக் கொண்டு சென்ற அம்புலன்ஸ் வண்டியில் பிரதானமாக இருக்க வேண்டிய (ஆக்ஸிஜன்) பிராண வாயு சிலிண்டர்களில் ஒன்றில் மாத்திரமே ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டிருந்ததாகவும் ஏனயவை வெறுமனே இருந்ததாகவும் இடையில் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நோயாளியினால் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு கொண்டு வரப்பட்டதும் இதய நோயாளி உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன
எட்டு நாட்களாக தொடர்ந்து அங்கு ஏன் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பிய இதய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபன் எக்கநாயக்க காலம் தாமதித்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும் கவலைப்பட்டார்.
9 ஆம் திகதி இதற்கான நவீன முறையிலான சிகிச்சை செய்யப்பட்டது. எனக்கு சத்திர சிகிச்சை செய்துவிட்டார்களா என்று நோயாளி கேட்கக்கூடிய நிலையில் சுலபமாக இச்சிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு செய்யப்பட்ட சிகிச்சை அடங்கிய சீடி ஒன்றும் வீட்டில் பார்ப்பதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார்கள்
முடிவாக என்ன சொல்ல வருகின்றேன் என்றால் கொழும்பில் வைத்திய சேவை ஒரு சேவை மனப்பாண்மையுடன் செய்யப்படுகின்றது. நோயாளிகளுக்கு அன்பும் ஆதரவும் காட்டப்பட்டு தெம்பும் வழங்கப்படுகின்றது. அதே போன்று நோயாளியின் குடும்பத்தவர்களும் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தப்படுகின்றார்கள்.

இவ்விடயங்களை கல்விமான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது வெளிப்பட்ட கருத்துக்கள்:-
*கிழக்கு மாகாணத்தில் நாம் நல்ல சீதனம் வாங்குவதற்காக டாக்டர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.
*மானிடதன்மையுள்ள டாக்டர்கள் பொறியியலாளர்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
*எமது டாக்டர்களில் சிலர் பிரைவேட் வைத்தியசாலைகளில் முழு நேரமும் அரச வைத்தியசாலைகளில் பகுதி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கின்றனர்.
*நாளுக்கு நாள் வைத்த்யத்துறையில் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் நிலையில் எமது டாக்டர்களில் ஒரு சிலர் பட்டம் பெற்றவுடன் அவற்றை தேடிப் படிக்காமல் கார் அடங்கலாக நல்ல சீதனங்களைப் பெற்று மனைவி குடும்பங்களுடன் பிக்னிக் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். 
மக்கள் விருப்பம்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top