முதலாம் தரத்துக்கு மாணவர்களை
இணைத்துக்கொள்வது தொடர்பில் அறிவுறுத்தல்
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒழுக்கவிதிமுறையுடன் தொடர்ந்தும் குறித்த அறிவுறுத்தல்களை விடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக்கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன.
போலியாகத் தயாரிக்கப்படும் ஆவணங்களைக்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் முயற்சிக்கின்றனர்.
இதன் காரணமாக எதிர் பார்க்கப்படும் தகுதிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. எனவே இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து தற்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தகவல்களை ஒழுக்கவிதிமுறைகளுடன் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், புள்ளிகள் வழங்கும் நடைமுறைகள் மற்றும் தெரிவு செய்யப்படும் மாணவர் வதிவிடம் குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள் ஏற்படாதவகையில் பிள்ளைகளின் தகமைகள் தொடர்பிலான தகவல்களை பகிரங்கப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிருபத்தில் சில மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை குறித்தும், நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment