இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில்
நம்பிக்கையில்லா பிரேரணைகள்
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது தடவையாக, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் 1957ஆம் ஆண்டிலும், 1975ஆம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணை, 1957ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
அது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் அதற்கு ஆதரவாக வாக்களித்தார். எதிராக 45 வாக்குகள் அளிக்கப்பட்டதால், அந்தப் பிரேரணை தோல்வியடைந்தது.
இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை, 1975ஆம் ஆண்டு- பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.
1975 டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 100 உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். இதனால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.
பிரதமருக்கு எதிரான மூன்றாவது நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
நாடாளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்பட்டுள்ள 47 ஆவது நம்பிக்கையில்லா பிரேரணை இதுவாகும்.
இதற்கு முன்னர் 23 நம்பிக்கையில்லா பிரேரணைகள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. 13 நம்பிக்கையில்லா பிரேரணைகள் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்களுக்கு எதிராக 6 நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஒரு தடவையும், தலைமை நீதியரசருக்கு எதிராக ஒருமுறையும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment