நான் செய்ய முடியாதவற்றை கூற மாட்டேன்.
 நான் சொல்வதை செய்பவன்
வாழைச்சேனை கடதாசி ஆலையை
புனரமைத்து தருவேன்
ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை
 சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்

இந்த நாட்டில் இருந்து போதைவஸ்து, கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் பொன்னான வாக்குகளால் நான் ஜனாதியாக வந்ததும் வாழைச்சேனையில் இருக்கின்ற மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனை முழுமையாக குளிரூட்டப்பட்டு வழங்கப்படும். கல்குடாத் தொகுதியிலுள்ள சிறிய வைத்தியசாலைகள், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் விரிவாக நடைமுறைப்படுத்தி செய்வதற்கு எனது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்பேன்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினை தரமுயர்த்துவேன். அதேபோன்று இளைஞர் யுவதிகள் விளையாடும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன். வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைத்து தருவதாக பலர் கூறியுள்ளனர். அதனை கேட்டு கேட்டு நீங்கள் வெறுத்துப் போய் உள்ளீர்கள்.

நான் செய்ய முடியாதவற்றை கூற மாட்டேன். நான் சொல்வதை செய்பவன். உங்கள் வாக்குகளால் நான் ஜனாதிபதியாக நிச்சயமாக வருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன். வாழைச்சேனை கடதாசி ஆலையை மூன்று மாத்திற்குள் அபிவிருத்தி செய்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் சுத்தமான குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்தி கல்குடாத் தொகுதியிலுள்ள அனைத்து பிரதேசத்திற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எங்களது அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்துவேன். அத்தோடு சுகாதார துறையை கட்டியெழுப்பி உங்களது ஆயுளை நீடிப்பதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

தொழில் முயற்சியாளர்களுக்கு, சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்வோம். முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லாமல் மூன்று இலட்சம் கடன் வழங்கப்படும். வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

சில இடங்களில் இருப்பவர்கள் சிலர் பிறதிவாதிகளுக்கு உதவி செய்யக் கூடியவர்கள். இவர்கள் இனவாத்தினை தூண்டுவது, பள்ளிவால்களை, ஆலயங்களை உடைப்பது, மத தலங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதை தான் பேசுகின்றார்கள். அழிப்பது, சுட்டெரிப்பது, இல்லாமல் செய்வது என்பது சஜித் பிரேமதாசவிடம் இல்லை. என்னிடம் கட்டியெழுப்புவது, உருவாக்குவது தான் கொள்ளையாக இருக்கின்றது.

ஒன்பது மாகாணங்கள், இருபத்தைந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த இலங்கையை கட்டியெழுப்பக் கூடிய சூழல் எதிர்வரும் 16ம் திகதி உருவாகும். சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்து அனைவருக்குமான பாதுகாப்பு ஒழுங்குகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம், போதைவஸ்து என்பவற்றை இந்த நாட்டில் இருந்து இல்லாதொழிப்போம்.

கொள்ளை, கொலைகாரர்களை இல்லாதொழிப்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன். ஒருமித்த இலங்கை நாட்டில் அதிகபட்ச அதிகார பகிர்வினை வழங்கி அனைவருக்கும் இறைமை, ஒன்றுமை என்ற விடயத்தினை வழங்கி ஒரு தாய் மக்களாக வாழ வழி நடாத்தி செல்வேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகத்தினையும், அதனுடன் உள்ள கிராம சேகவர் பிரிவுகளிலும் உள்ள மக்களை சந்தித்து என்னை ஜனாதியாக கொண்டு வரும் பொழுது இந்த நாட்டில் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பி, இந்த நாட்டில் அபிவிருத்தியை உச்ச கட்டத்தில் மேற்கொள்ளும் போது மட்டக்களப்பு மாவட்டமும் அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் என்றார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top