மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி
அமெரிக்காவில் சம்பவம்!
அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பாடசாலை அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது கோழைத்தனமான தாக்குதல் என மன்ஹாட்டன் மேயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வெள்ளை மாளிகை நிர்வாகம் கேட்டுள்ளது.
இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாமாக என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் வாகனங்களில் வந்து அப்பாவி மக்கள் மீது ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் பொலிஸாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மீண்டும் இங்கு அனுமதிக்க விடமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment