தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

சாய்ந்தமருது மக்கள் உறுதி



சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இடம்பெற்றது .

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச சிவில் அமைப்புக்கள், இளைஞர் இயக்கங்கள் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன.

நேற்றைய ஹர்த்தால் நடவடிக்கையின்போது சாய்ந்தமருது ஜும் ஆப்பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளைஞர்களும், பொதுமக்களும் கறுப்புத் துணியால் தமது வாய்களை கட்டிக்கொண்டு வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வீதி மறியல் போராட்டம் வன்முறையாக மாறாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்றும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள் இயங்கவில்லை. சகல கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் நேற்று இரு வேளை தொழுகையை வீதியிலேயே நடத்தினர்.

இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்தும் செய்யும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சந்தித்து மக்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை. இதனால் சாய்ந்தமருது மக்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசம் தற்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இருந்து வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் 30, 442 குடிமக்கள் வசித்து வருவதுடன் 19, 032 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடையடைப்பு, ஹர்த்தால் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீதி மறியல் போராட்டம் இடம்பெற்றதையடுத்து அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினர்.

இதற்கிடையே கல்முனை பொலிஸார் கல்முனை நீதிமன்றத்தில் வீதி மறியலுக்கெதிராக தடையுத்தரவு ஒன்றையும் பெற்றனர்.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது முழு இளைஞர்களும், வயோதிபர்களும், வீதியில் திரண்டு அரசியல் தலைமைகளுக்கெதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top