சாய்ந்தமருதுக்கு  தனியான உள்ளூராட்சி சபை 

வலியுறுத்தி ஹர்த்தால்

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று 30 ஆம் திகதி  திங்கட்கிழமை சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த செயலணியின் அழைப்பின் பேரில் இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், ஸாஹிறா தேசிய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை.
இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டம் காரணமாக சாய்ந்தமருது ஊடான கல்முனை- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று பொதுப் போக்குவரத்து சேவைகளும்  இடம்பெறவில்லை.
எனினும் தனிப்பட்ட போக்குவரத்துகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படவில்லை. சாய்ந்தமருது நகரம் எங்கும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த ஹர்த்தாலை முன்னிட்டு சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

அத்துடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொருட்டு பொது மக்கள் நோன்பு வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலிலும் இன்று 30 ஆம் திகதி அதிகாலை நோன்பு நோற்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்த.

எமக்கான தனியான பிரதேசசபை அமைத்துத்தரும் வரை எமது போராட்டம் தொடரும், அரசியல்வாதிகளை எமது பிரதேசத்திற்குள் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம் என சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனியான பிரதேச சபையினைக்கோரி, சாய்ந்தமருதில் அனைத்து பள்ளிவாசல்களின் உலமாக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்று சேரந்து 3 நாட்களுக்கான கடையடைப்புடன் கூடிய மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வீதிகள் அனைத்திலும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டு அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இந்த போராட்டத்தினை எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள்,

எங்களது மக்களின் தொகைக்கு ஏற்பவும் வாக்காளர் தொகைக்கு ஏற்பவும் தனியான உள்ளூராட்சி சபையினை பிரித்துத்தர முடியும் அதனை எமது அரசியல்வாதிகள் எவரும் இதுவரை செய்து தரவில்லை.

ஆகவே இதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

இந்த போராட்டமானது இன்று நடைபெறுவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமும்

இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோரே பிரதானமானவர்கள் . இவர்களோடு ஏனைய அரசியல்வாதிகளும் இணைந்து இந்த மக்களை ஏமாற்றியதன் விளைவுதான் இன்று இந்த நிலமைக்கு நாங்கள் வருவதற்கு காரணமாக அமைந்தது.

தேர்தல் காலங்களின்போது பலர் பலதரப்பட்ட வாக்குறுதிகளை தந்து விட்டு சென்று விடுகின்றார்கள் குறிப்பாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இதற்கான வாக்குறுதியினை கல்முனையில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் வைத்து பகிரங்கமாகத் தந்து விட்டு சென்றார்.

அதே போன்று இங்கு வந்து சென்ற அனைத்து அமைச்சர்களும் இதுபோன்ற வாக்குறுதிகளை மாத்திரமே தந்து விட்டு சென்றார்கள் ஆனால் இதுவரை எந்தவிதமான செயற்பாடும் நடந்தேறியதாக தெரியவில்லை.

இப்பிரச்சினையானது இன்று, நேற்று முளைத்தது அல்ல பல நூற்றாண்டு காலமாக இருந்து வரும் பிரச்சினை நாங்கள் எங்களது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினையே கேட்டு நிற்கின்றோம் அதனை பெற்றுத்தர அரசியல்தலைமைகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்


 தேவேளை நேற்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி மக்கள் எழுச்சி பொதுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பொதுப்பிரமுகர்கள் பலர் சமகால நிலைமையை விளக்கி உரையாற்றினார்கள்.
வீதி எங்கும் பொதுமக்கள் திரண்டிருந்தார்கள். சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இத்தெளிவுபடுத்தும் கூட்டத்தில் இன்றைய கடையடைப்பு பற்றியும் விரிவாக சொல்லப்பட்டது.
கல்முனையை நான்காகப் பிரிப்பதற்கும் அக்குழுவினருக்கும் நாம் உடன்பாடில்லை என்ற கருத்தில் பேச்சுக்கள் இடம்பெற்றன. அது மட்டுமல்லாமல் தனியான பிரதேசசபை அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறப்பட்டது.

சாய்ந்தமருதுப் பொதுமக்கள் கட்சி பேதம் மறந்து அனைவரும் ஒருமித்து இவ்விடயத்தில் முழு மூச்சாகச் செயற்படுவதைக் காணக்கூடியதாயுள்ளது.


















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top