சாய்ந்தமருதில் போராட்டம் உக்கிரம்
பொலிஸார் குவிப்பு:
இயல்புநிலை முற்றாக பாதிப்பு
சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபையை வென்றெடுக்கு முகமாக இன்று 31 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அங்கு மக்கள் போராட்டம்
உக்கிரமடைந்து இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிவாசல் முன்னாலுள்ள அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியை மறித்து சாலை மறியல் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள். வயோதிபர்கள், என ஆண்கள், பெண்கள் எல்லோரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயலுக்கு முன்பாக பிரதான வீதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதையில் அமர்ந்து அல்லாஹு அக்பர் கோஷமிட்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கறுப்பட்டியணிந்த பெருந்திரளான இளைஞர்கள்
வயோதிபர்கள் வீதியில் அமர்ந்து தமது சத்தியாக்கிரகத்தை நடத்தியதனால் வீதிப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்த நிலையில் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பூரண ஹர்த்தால் காரணமாக இன்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள சகல கடைகளும் பூட்டப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைகளில் மாணவர் வரவின்மையால் பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், வங்கிகளும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment