பள்ளிவாசலுக்கு முன்னால் போராட்டம் மேற்கொள்வது

மனவேதனையான விடயம்

வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிப்பு

வவுனியா பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள கடைகளை குறிவைத்து போராட்டம் மேற்கொள்வது மன வேதனைக்கான விடயமாக இருக்கிறது என வவுனியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து தமிழ் இளைஞர்கள் சிலர் இன்றைய தினம் வவுனியா நகரப்பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமிய இளைஞர்களும் ஒன்று கூடியமையால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் காலை முதல் மதியம் வரை பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டம் குறித்து அப்பகுதியில் உள்ள வவுனியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட போராட்டமானது வவுனியா பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள கடைகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது மன வேதனைக்கான விடயமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் அகற்றப்பட வேண்டும்.

அப்போது நாங்களே முன்நின்று இந்த கடைகளை அகற்றி தருவோம் என்பதுடன், 1995ஆம் ஆண்டு நகரசபையின் நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் 14 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வவுனியாவில் பல இடங்கள், குளங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றை தடுக்காது குறித்த ஒரு இனத்தினுடைய கடைகளை மட்டும் அகற்ற முனைவது தான் வேதனையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top