தேர்தல் மேடைகளில் வரம்பு மீறிப் பேசி

மக்களிடம் வாக்குப் பெற முயற்சிக்கக் கூடாது



குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் செயல்படுவதாக மக்களிடம் மேடைக்கு மேடைக் கூறிக்கொள்ளும்  அக்கட்சியின் தலைவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் செயல்பாட்டிலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதன் கொள்கைகளை நடைமுறையில் கொண்டு செயல்படுகின்றார்களா? என பலராலும் பலமுறை கேள்வி எழுப்பியும் இதுவரை அதற்கான சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
புனித குர்ஆன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்பன மானிட வாழ்க்கைக்கு தேவையான வழிமுறைகளை அழகான முறையில் தெரிவித்துள்ளன அவைகளின் வழிகாட்டியில் நாம் வாழ்ந்துவிட்டால் எவருக்கும் எந்தவிதப் பிரச்சினையுமில்லை.
ஆனால், குர்ஆன், ஹதீஸ் என்பதே எமது அடிப்படைக் கொள்கை, அவைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு ஒரு கொசுவின் இறகுக்கும் மதிப்பில்லாத இந்த உலகத்தின் சொற்பகால வாழ்வில் அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்காக கலிமாச் சொன்ன எமது சகோதரர்களை ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் அரசியல் மேடைகளில் தாக்கி விமர்சித்துப் பேசுவது குறித்து அரசியல் கட்சியில் உள்ளவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்கு தவறிவிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டகச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 13 ஆம் திகதி இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவதாக மக்களிடம் கூறிக்கொள்ளும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பேசும் போது தெரிவித்த சில கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் சிலரைத் தாக்குவதாக அமைந்திருந்ததாகக் கூறி எம்மையெல்லாம் படைத்து பரிபாலித்துக் கோண்டிருக்கும் அல்லாஹ்வைப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியிலுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக தமது சகோதரர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என அலாஹ்வைப் பயந்த அந்த மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
எமக்கு குர்ஆன், ஹதீஸ் கற்றுத் தந்துள்ள வழிமுறைகளின்படி அழகான வார்த்தைகளைப் பேசி எதிரிகளையும்  தமது பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். அற்ப அரசியலுக்காக குர்ஆன், ஹதீஸ் வழிமுறைகளை மறந்து செயல்படக்கூடாது.
மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்  தனக்கு இருந்த அதிகாரத்தைப் பாவித்து சகல பிரதேசங்களிலும் சிறப்பாகச் சேவையாற்றிக் கொண்டிருந்த நிலையிலும் அன்னாரின் சேவைகளைப் பொறுக்க முடியாத இதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் அன்னாரை பருப்பு அமைச்சர், வெங்காய அமைச்சர் என அன்னார் வகித்த அமைச்சுப் பதவியையும் அன்னாரையும் இழிவு படுத்தி மேடைகளில் பேசி வந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அவர்களை அன்னார் பதவி வகித்த காலத்தில் இவ்வாறு ஏசி, இழிவுபடுத்திப் பேசியவர்கள்தான் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் அன்னார் மரணம் அடைந்ததன் பின்னர் புகழாரம் சூட்டினர், அன்னாரின் சேவைகளைப் பாராட்டி துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டனர். எனவேதான், அற்ப சொற்ப அரசியலுக்காக எவரையும் எவரும் தனிப்பட்டமுறையில் தாக்கிப் பேசக்கூடாது என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஓட்டமாவடி பிரதேச சபையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டகச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 13 ஆம் திகதி இரவு நடைபெற்ற அந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனிப்பட்டவர்களுக்கு எதிராகப் பேசிய அந்த தரமில்லாத பேச்சை மாத்திரம் செய்தியாக முஸ்லிம்களின் செய்திகளையும் நாங்கள் ஒளிபரப்புச் செய்யத்தான் செய்கின்றோம் எனக் காட்டுவதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம்  ஒளிபரப்புச் செய்து தான் பின்பற்றும் ஊடகத் தர்மத்தை மக்களுக்கு பறைசார்த்தியது.
அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சொல்லிய விடயங்களை அவரால் ஆட்சியாளர்களிடமோ அல்லது சட்டத்தின் முன் கொண்டு சென்றோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
இப்படி எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படாத அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம்  ஒளிபரப்புச் செய்த விடயங்களை பொறுப்புவாய்ந்த அமைச்சரான குர்ஆன், ஹதீஸ் என்பதே எமது அடிப்படைக் கொள்கை எனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அபாண்டமாக மக்கள் முன் வைத்து பேசுவது எந்த வகையில் நியாயம் எனவும்மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இஸ்லாத்திற்கு விரோதமாக இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பாமர மக்களிடம் பரப்பி  தங்கள்  அதிகாரங்களை நிலை நிறுத்துவதற்காக மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு சகலரும் நம்மைப் படைத்த அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top