அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

ஜனாதிபதியின் கோரிக்கை


ஜனாதிபதியிமைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று வரும் 14ஆம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தாம் பதவியேற்ற 32(1) அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு அமைய, ஆறு ஆண்டுகள்- அதாவது 2021 வரை பதவியில் நீடிக்க முடியுமா அல்லது தற்போது நடைமுறையில் உள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய 2020 வரை மாத்திரம் பதவியில் இருக்க முடியுமா என்று விளக்கமளிக்குமாறு அவர் உச்சநீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், நாளை காலை 11 மணிக்கு உச்சநீதிமன்றம் திறந்த வாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சட்டவாளர்கள் சங்கத்துக்கு உச்சநீதிமன்றப் பதிவாளர், ஜெயசேகர நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். சட்டவாளர் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு இது தொடர்பாகத் தெரியப்படுத்தியுள்ளது.

சட்டவாளர்கள் திறந்த நீதிமன்ற விவாதத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக, சட்டமா அதிபர் தரப்பின் கருத்துக்களையும், உச்சநீதிமன்றப் பதிவாளர் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதியாகப் பதவியேற்று நேற்றுடன் மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விளக்கத்தைக் கோரியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top