ஊவா மாகாண முதலமைச்சர்

கல்வி அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

ஊவா மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை கல்வி அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் முழுமையாக பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர், ஊவா மாகாண ஆளுநரிடம் அவர் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தான் மாகாண கல்வி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர் ஒருவரை பதுளையில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு அதன் அதிபருக்கு தான் வழங்கிய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாததனால், அந்த மாணவிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிபரை தாம் வீட்டுக்கு அழைத்து நடைமுறையில் உள்ள சட்டவிதிகளுக்கு அமைய மாணவியை பாடசாலையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
மாகாண தலைமைக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் இந்தச் சந்தர்ப்பத்தில் சமூகமளித்திருந்ததாகவும் , இதன்போது பாடசாலை அதிபர் மாணவியை வித்தியாலயத்தில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்து, தலைவணங்கி மரியாதை செலுத்தி அங்கிருந்து சென்றதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக்க கொண்டு அரசாங்கத்திற்கும், ஊவா மாகாண சபைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட கட்சி தமக்கு எதிராக அதிபரை முழங்காலிட செய்ததாக தெரிவித்து உண்மைக்கு புறம்பான பிரசாரத்தை முன்னெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டூள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top