மாலைதீவில் பாராளுமன்றத்திற்கு இராணுவம் பூட்டு

எம்.பிக்கள் கைது

மாலைதீவில் எதிர்க் கட்சியினரை விடுவிக்க ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன் மறுத்திருப்பதற்கு உச்ச நீதிமன்றம் பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அங்கு அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு படையினர் நாட்டின் பாராளுமன்றத்தை மூடியிருப்பதோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் மீதான தீவிரவாத மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் கடந்த வாரம் கைவிடப்பட்ட நிலையில் அவர் உட்பட ஒன்பது பேரை விடுவிப்பதற்கு எந்த சட்ட தடங்கலும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தீவிரவாதம், குண்டு தாக்குதல்கள், ஊழல், மோசடி குச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்டவர்களைவிடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் மொஹமது அனில் கேள்வி எழுப்பிய நிலையிலேயே நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு மாலைதீவில் அரசியல் பதற்றத்தை தீவிரமாக்கி இருப்பதோடு யாமீன் அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. யாமீன் அரசு மீது எதிர்ப்பாளர்கள் ஊழல், தவறான ஆட்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்து வருகிறார்.
கடந்த காலங்களில் யாமீன் அரசுக்கு ஆதரவாக இருந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு திடீர் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்புக்கு சர்வதேச அளவில் பரந்த ஆதரவு கிடைத்திருப்பதோடு எதிர்க் கட்சியினரை விடுவிப்பதற்கு யாமீன் அரசுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியை வெளியேற்ற முயற்சிப்பதாக அரசு குற்றம்சாட்டியுள்ளது. எனினும் கடந்த ஞாயிறு பின்னேரம் நீதிபதிகள் வெளியிட்ட அறிவிப்பில் இது குறித்து பதில் அளிக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த ஞாயிறு காலை இராணுவ மற்றும் பொலிஸ் தலைவர்கள் புடைசூழ தொலைக்காட்சியில் தோன்றிய சட்டமா அதிபர், யாமீனை உடன் பதவி நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான சட்டவிரோத உத்தரவுக்கு அடிபணிய வேண்டாம் என்று நான் அனைத்து சட்ட அமுலாக்கல் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்என்று அனில் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையை பாதுகாப்பு படைகள் பின்பற்றும் என்று இராணுவ தளபதி அஹமது சியாம் குறிப்பிட்டார். “மாலைதீவு பிரச்சினைக்குள் விழுவதை பொறுமையாக பார்க்க மாட்டேன்என்று அவர் கூறினார்.
சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு, “அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்று எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபர் மற்றும் நாட்டின் தலைமை அரச வழக்கறிஞரை நீக்க பாராளுமன்றத்தில் மனுச் செய்திருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான விரைவிலேயே இராணுவம் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து யாரும் நுழைய முடியாமல் அதனை மூடியது. 85 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினரே பெரும்பான்மையாக உள்ளனர். அத்துடன் கடந்த ஆண்டு தனது ஆசனங்கள் பறிக்கப்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் அங்கத்துவத்தை வழங்குப்படி உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த 12 எம்.பிக்களில் இருவர் பல மாதங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப்துல்லா சினான் மற்றும் இல்ஹாம் அஹமது இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேசிய கொடியை அசைத்தவாறு ஞாயிறு இரவு வீதிகளில் ஒன்று திரண்டனர்.
இதேவேளை இன்று செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி பாராளுமன்றத்தை கூட்டுவது ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்ற செயலகத்தின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மாலைதீவின் பிரதான உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைய தலைவர் அகியோரும் அண்மைய தினங்களில் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.
இலங்கையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி நஷீத், மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, பாதுகாப்பு படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் சட்டமா அதிபர் மற்றும் இராணுவ, பொலிஸ் பிரதானிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டமா அதிபர் அனிலின் அறிவிப்புசதிப்புரட்சி ஒன்றுக்கு நிகரானதுஎன்று நஷீட் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

யாமீன் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றும்படி ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உட்பட பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top