ரொஹிங்கிய முஸ்லிம்களைக் கொன்ற
மியன்மார் படையினருக்கு 10 ஆண்டுகள் சிறை
கடந்த ஆண்டில் 10 ரொஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பில் ஏழு மியன்மார் இராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“கொலையில் பங்கேற்றது மற்றும் பங்களித்ததற்கு” இந்த படை வீரர்களுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவத்தின் அறிவிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் படையினர் தொடர்புபட்டிருப்பதை இராணுவம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் முதல் முறை ஏற்றுக்கொண்டது. ரகைன் மாநிலத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடுவதாக மியன்மார் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இன் டின் கிராமத்தில் இடம்பெற்ற கொலைகளில் பங்கேற்றது தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று அதிகாரிகள் அல்லாத வீரர்கள் இராணுவ நீதிமன்றம் ஒன்றில் குற்றங்காணப்பட்டுள்ளனர் என்று மியன்மார் இராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்திய இரு ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறைகளால் 650,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்கள் கூட்டுப் படுகொலைகள், கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
0 comments:
Post a Comment