ஏப்ரல் 23 இல் முழுமையான
அமைச்சரவை மாற்றம்



பிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால் ஐதேக அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.
இந்த நிலையில், அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
எனினும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரித்தானியா செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 22ஆம் திகதி நாடு திரும்புவார். அதன் பின்னர், வரும் 23ஆம் திகதி அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த இரண்டு ஐதேகவினருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது, மீண்டும் பதவிகள் வழங்கப்படும் என்று ஐதேகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பதவி விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்கள், 5 பிரதி அமைச்சர்களுக்குப் பதிலாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த மேலும் மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதியுடன், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான ஐதேக குழுவினர் பேச்சு நடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனநாயக்க, பாலித ரங்க பண்டார, ரஞ்சித் அலுவிகார ஆகியோருக்கே அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐதேக தரப்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது..


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top