ஐ.தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால்
வழங்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை
வாபஸ் வாங்குமாறு பிரதமர் கோரிக்கை


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற பின் வரிசை உறுப்பினர்களால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் வாங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 06 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 20 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இதனை கையளித்திருந்தனர். இந்நிலையில் அதனை வாபஸ் வாங்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் இதனை கூறியுள்ளது.
இது ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் பிரதமர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top