சம்பந்தனை நம்பவைத்து ஏமாற்றியதாக
முஸ்லிம் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு!


எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபையில் ஆட்சியமைப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குச்சவெளி பிரதேசசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஹக்கீமும் சம்பந்தனும் பேசிய விடயங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குச்சவெளியில் ஆட்சியமைப்பது குறித்து சம்பந்தனுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட அமைச்சர்  ஹக்கீம், அதற்கு முரண்பட்ட வகையில் செயற்பட்டுள்ளார் என குற்றம் சாட்டப்படுகின்றது.
இதேபோல் தான் வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை சேர்ந்து அமைக்கலாம் என கூட்டமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய முஸ்லிம் காங்கிரஸ், இறுதி நிமிடத்தில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்ததாக அக்கட்சியின் கல்குடா பிரதேச பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஏறாவூர் நகரசபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியிருந்ததாம்.

ஏறாவூர் நகரசபையில் தவிசாளர் தெரிவிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் அணியிலிருந்து வாசித் அலியும்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா அணியிலிருந்து முஹம்மட் ஸாலி நழீம் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்கு பிரேரிக்கப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் வாசித் அலிக்கு 9 உறுப்பினர்களும், நழீம் என்பவருக்கு 7 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் கூட்டமைப்பு வசாத் சாலிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதனாலேயே ஏறாவூர் நகரசபையில் முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட் அணியைச் சேர்ந்த வாசித் அலி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து குச்சவெளி பிரதேசசபையில் கூட்டமைப்பும், சிறிலங்கா மஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று கூட்டமைப்பின் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய முஸ்லிம் காங்கிர்ஸ் தலைவர் ஹக்கீம் வழமையைப் போன்றே குத்துக்கரணம் அடித்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பையும், கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையையும் மீறி குச்சவெளி பிரதேசசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது என குற்றம்சாட்டப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top