மன்னார் பிரதேச சபை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!
மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று மாலை உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவளித்த நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இஸ்ஸதீனும், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். இந்த பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், ஹீனைஸ் பாரூக், முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment