2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை
விடுதலை செய்ய
சவூதி இளவரசர் உத்தரவு


சவூதி அரேபியா நாட்டு சிறைகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.

சவூதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்றவழக்குகளில் விசாரணை கைதியாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சவூதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

நேற்று முன் தினம் அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத்-திடம் தெரிவித்தார்.

ஏழை தொழிலாளர்களாக சவூதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வருமானம் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக இளவரசரிடம் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.

இதனையேற்ற முஹம்மது பின் சல்மான் அல் சவுத், சவூதி அரேபியா நாட்டு சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவூதி அரசு பரிசீலித்து வருவதாகவும் பவாத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு இன்று இந்தியா செல்லும் சவூதி இளவரசரிடம் இதே கோரிக்கையை இந்திய அரசும் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சவூதி இளவரசர் உத்தரவிட்டால் சிறிய குற்றங்களுக்காக அந்நாட்டு சிறைகளில் அடைக்கபட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விரைவில் விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top