மீராவோடை வாராந்த சந்தை
மாதத்தில் இரண்டு தடவை நடைபெறும்
பிரதேச சபையின் விசேட அமர்வில் தீர்மானம்

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தையை மாதத்தில் இரண்டு தடவைகள் நடாத்துவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் .ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தில் சமூக நல்லிணத்துக்காக பிரச்சினைகள், கருத்து முரண்பாடுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக கல்குடா அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினருடன் கலந்தாலோசித்து இப்பிணக்குகளை தீர்த்து தருமாறு சபை உறுப்பினர்கள் அனைவரும் நாடியிருந்தோம்.

அந்தவகையில் மாதத்தில் இரண்டு தடவைகள் அதாவது முதலாவது வாரமும், இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும் வாராந்த சந்தையை நடாத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தனர்.

அத்தோடு ஓட்டமாவடி வர்த்தகர்களுக்கும் போதிய இடங்களை வழங்க வேண்டும் என்றும் கல்குடா அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினரால் எங்களுக்கு தரப்பட்ட ஆலோசனையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த தீர்மானத்தையே சபையின் விசேட அமர்வில் தீர்மானித்துள்ளோம். இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இப்பிரதேசத்தில் பிரச்சனைகள் வந்துவிடாது பாதுகாப்பதற்கு பள்ளிவாசல்கள், வர்த்தகர்கள், மக்கள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசலால் நடாத்தப்படும் வாராந்த சந்தை மாதத்தில் முதலாவது வாரமும், மூன்றாவது வாரமும் நடாத்த வேண்டும். வேறு இடங்களில் நடாத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்படவில்லை. அத்தோடு இதனை நாளாந்த சந்தையாக மாற்றினாலும் பிரச்சினை இல்லை என்பதனை ஓட்டமாவடி வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மீராவோடை வாராந்த சந்தையில் தரமான மற்றும் தரம் குறைந்த பொருட்கள் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கொண்டு நடாத்துவதற்கு ஆராய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top