இந்தியா எங்களைத் தாக்கினால்
நாங்கள் பதிலடி கொடுப்போம்;
ஆதாரங்களைக் கொடுங்கள் :
பாக்.பிரதமர் இம்ரான் கான் ஆவேசம்



இந்தியா எங்களைத் தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம். புல்வாமா தாக்குதலில் ஆதாரங்களை அளித்தால் உறுதியான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் முகமது தீவிரவாதி, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் முகமது தீவிரவாத அமைப்புதான் காரணம் என்றும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு பின்னணியில் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது.

தொடர்ந்து பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய இந்திய மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுக்கு வழங்கிய வர்த்தகரீதியான நட்பு நாடு அந்தஸ்தைப் பறித்தது. இறக்குமதிப் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதித்தது.

புல்வாமா தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. டெல்லியில் உள்ள  பாகிஸ்தான் துணை தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை கண்டித்தது. ஆனால், புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உறுதியான ஆதாரங்களை அளியுங்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்குஇடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு வானொலியில் புல்வாமா தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''புல்வாமாவில் கடந்த 14-ம் திகதி இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் நலனுக்காக நடத்தப்பட்டது அல்ல. தீவிரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எல்லையில் ஊடுருவல் மூலம் 70 ஆயிரம் பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆதலால், தீவிரவாதம் குறித்து நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். ஆனால், எந்தவிதமான உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்திய அரசு எங்கள் மீது புல்வாமா தாக்குதலுக்கு குற்றம் சாட்டுகிறது. புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய அரசு தெளிவான, உறுதியான ஆதாரங்களை அளித்தால், நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்.

இந்தியா, பாகிஸ்தானில் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வேண்டும். இந்தியா தங்களின் உளவுத்துறையை முழுமையாகப் பயன்படுத்தி, புல்வாமா தாக்குதல் குறித்த ஆவணங்களைத் திரட்டினால், இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைத்து  விசாரணை நடத்தி, தாக்குதலுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க நாங்கள் உதவுகிறோம்.

தீவிரவாதத்தை நாங்கள் பூண்டோடு அழிக்க முயல்கிறோம். தீவரவாதத்தால் நாங்களும் லட்சக்கணக்கான மக்களையும், கோடிக்கணக்கிலான டாலர்களையும் இழந்துவிட்டோம். கடந்த 15 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் போராடி வரும் போது, எவ்வாறு தீவிரவாதத்தால் நாங்கள் பயனடைந்திருக்க முடியும்.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ராணுவத்தின் அடக்குமுறையால் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு தீர்வு காண முடியாது. வெற்றிகரமான வழியும் அல்ல.இந்த விஷயத்தில் இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் விவகாரம் போன்று காஷ்மீர் விவகாரமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்.

புல்வாமா தாக்குதலுக்குப் பழிவாங்குவோம் என்று இந்திய அரசியல் தலைவர்கள் பேசுவதை நான் ஊடகங்கள் வாயிலாக அறிகிறேன். அவ்வாறு பாகிஸ்தான் மண்ணில் இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்கள் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து தகுந்த பதிலடி கொடுப்போம்.

போரைத் தொடங்குவது எங்கள் கையில் இல்லை, தொடங்குவது எளிதானது. ஆனால், முடிப்பது கடினமானது, எங்கள் கைகளில் இல்லை.  

இந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடக்க உள்ளது. எங்கள் மீது குற்றம்சாட்டி, எளிதாக வாக்குகளைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள்.  .

இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ நாங்கள் விரும்புகிறோம். ஆனால், காஷ்மீரில் எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று எங்கள் மீது இந்தியா குற்றம் சாட்டி, எங்களை மீண்டும் மீண்டும் கசையடிக்கு ஆளாக்குகிறது.

பாகிஸ்தான் மண்ணை யாராவது தீவிரவாதச் செயல்கள் செய்வதற்கு பயன்படுத்தினால், அவர்கள் எங்களுக்கு எதிரிதான். எங்கள் நலனுக்கும் எதிரானதுதான்''. இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top