சூடானில் ஆட்சி கலைப்பு
ஓராண்டு காலத்துக்கு 
அவசரநிலை சட்டம் பிரகடனம்

   
சூடான் நாட்டில் மத்திய, மாநில அரசுகளை கலைத்து உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி ஒமர் அல்-பஷிர் அங்கு ஓராண்டுக்கு அவசரநிலை சட்டத்தையும் பிரகடனப்படுத்தியுள்ளார்.

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.

அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிலவரம் கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் நிலைமை உருவாகியுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த கவர்னர்கள் மற்றும் ஆளும்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஜனாதிபதி  ஒமர் அல்-பஷிர் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் எவ்வித சுமுக முடிவும் எட்டப்படவில்லை.

இதைதொடர்ந்து, நாட்டில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தின்போது வலியுறுத்திய ஜனாதிபதி, அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து உத்தரவிட்டார்.

மறு அறிவிப்பு வரும்வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஓராண்டு காலத்துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனப்படுத்தவதாகவும் அறிவித்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top