சவூதி அரேபியாவில் பெண்களை
கண்காணிக்க புதிய ஆப்
- அரசுக்கு வலுக்கும் கண்டனம்

   
சவூதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்நாட்டு அரசிற்கு மனித உரிமை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும்  பெண்கள் எங்கு செல்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது.
இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆப் மூலம் சவூதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை உலவு பார்ப்பது போல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை சவூதி அரசு மறுத்துள்ளது.

'தி அப்ஷர்'  என்ற இந்த ஆப் பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருக்கிறது என சவூதி அரசு கூறியுள்ளது.

இந்த ஆப் அனைத்து செல்போன்களிலும் பயன்படுத்தக்கூடியது. இதன்மூலம் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை புதுப்பித்துக் கொள்ளவும் இயலும் என கூறியுள்ளது.

இதனையடுத்து இந்த ஆப் குறித்து தனக்கு தெரியாது எனவும், இது குறித்து பரிசீலிக்க உள்ளதாகவும் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரான் வைடன், ''செல்போனில் செயல்படும் அப்ளிகேஷன்கள் மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது எனும் கருத்தை அப்ஷர் ஆப் கேள்விக்குறி ஆக்கி உள்ளது. இந்த ஆப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தூண்டுவதால் ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை நீக்க வேண்டும். சவூதியின் இந்த பிற்போக்கு தன்மை கொண்ட  செயலையே அமெரிக்கா எதிர்க்கிறதே தவிர,  அரசியல் காரணங்கள் எதுவுமில்லை  '' என குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top