உரிய நேரம், இடத்தை முடிவு செய்து
 இந்தியாவுக்கு பதிலடி:
இம்ரான் கான் எச்சரிக்கை



இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மிராஜ் வகை போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் இந்தியத் தாக்குதலைத் தொடர்ந்து மறுத்து வரும் பாகிஸ்தான், இந்தியா அத்துமீறி பாலாகோட்டுக்குள் நுழைந்ததாகவும் பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதில் இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றதாகவும் கூறி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சர்ளும் முப்படைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
 ''தேசியப் பாதுகாப்புக் குழு கூடி இந்தியாவின் அத்துமீறல் குறித்து விவாதித்தது.

பொறுப்பற்ற வகையில், கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட தாக்குதல் இது. தேர்தல் சூழலில் இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா, பிராந்திய அமைதியையும் நிலைத்தன்மையையும் ஆபத்தில் வைத்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு மூலம் இந்தியா தவறிழைத்துவிட்டது. இதற்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவுசெய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். ராணுவத் தலைவர்களும் நாட்டு மக்களும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும்.

இதுதொடர்பாக பாகிஸ்தான், உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரக இளவரசர் மற்றும் சவூதி இளவரசருடன் போனில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நாளை நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கூடி விவாதிக்க உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top