சாய்ந்தமருதுக்கு  தனியான உள்ளூராட்சி சபை விவகாரம்
வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்
அதிரடியான கேள்விகளும் தெளிவில்லாத பதில்களும்



இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நேரடி நிகழ்ச்சியில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை விவகாரம் குறித்து பேசுவோம் பேசுவோம் இன்னும் பேசுவோம் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை இழுத்தடிப்போம், இழுத்தடிப்போம் பதவிக்காலம் வரை இழுத்தடிப்போம் என்று சொல்லாமல்  சொல்வதைப்போல் இருந்தது.
பேசுவோம் பேசுவோம் எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை தன்னாலோ  அல்லது அமைச்சர்களாலோ அல்லது ஜனாதிபதி , பிரதமரா லோ தீர்வு வழங்க முடியாது என்று சொல்வதும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை என்னால் செய்ய முடியாது என்று சொல்லாமல்  சொல்வதைப்போல் இருந்தது.

பிரதேச அடிமட்டத்தில் இருந்து தீர்வு வரவேண்டும் என்று கூறுவதன் அர்த்தம்   என்ன என்பது மக்களுக்கு புரியாத புதிர்போன்று உள்ளது.
சாய்ந்தமருது மக்களுக்கு தேவையான தனியான உள்ளூராட்சி சபையைப் பெறுவதற்கு தங்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம்தான் பேசவேண்டும் அதைவிடுத்து சாய்ந்தமருது  மக்கள் யாருடன் பேசவேண்டும் எதற்காக பேசவேண்டும் ?
இது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை இழுத்தடித்துக் கொண்டு செல்லும் கபட நாடகமாக உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது மாத்திரமல்லாமல், இன்று பேசுவோம், பேசுவோம் என்று சொல்பவர்கள் தேர்தல் காலங்களில் பொது மேடைகளிலும், பள்ளிவாசல்களிலும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கல்முனையில் உள்ள சகல ஊர் மக்களுடன் பேசியே அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களால் அன்று வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சகல ஊர்களுடன் பேசி தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்று கூறுபவர்களிடம் எழுப்பப்படுகின்றது.

அன்று எங்களால்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுத் தர முடியும் என்று பொது மேடைகளில் பகிரங்கமாகக் கொக்கரித்தவர்கள் இன்று தன்னாலோ  அல்லது அமைச்சர்களாலோ அல்லது ஜனாதிபதி  பிரதமராலோ தீர்வு வழங்க முடியாது அடிமட்டத்தில்தான் பேச வேண்டும் என்று சொல்வதற்கான அர்த்தம் என்ன? எங்களால் பெற்றுத்தர விருப்பமில்லை என்பதன் மாற்றுப்பேச்சா இது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எச்.எம்.எம்.ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் இப்பிரதேச மக்கள் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு கல்முனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பலத்தோடு உள்ளார்.

இவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்கள் கொண்டுள்ள நெருங்கிய உறவைக் கொண்டு இவர்கள் மூலம் சாய்ந்தமருது மக்கள் தங்கள் பிரச்சினையை சுலபமாக கையாண்டு யாருக்கும் பாதகமில்லாமல் அவர்களுக்குள் பேசி தீர்க்க கிடைத்துள்ள அரியதொரு சந்தர்ப்பமாகும் என இராஜாங்க அமைச்சர் அதிர்வில்  கூறியதன் அர்த்தம் என்ன? பந்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பக்கம் அடித்துவிட்டு இப்பிரச்சிணையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான முயற்சியா இது எனவும் மக்கள் வினவுகின்றனர்.
                                                                     
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அதிர்வு நிகழ்ச்சியில் பல உண்மைகளை செருமலுடனான தனது பதிலில் ஒப்புக்கொண்டுள்ளார் ,   அமைச்சர் ரிசாத் பதியுதீனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம் என்று கூறி அதில் தான் பலஹீனமானவன் என்பதை பலமுறை ஒப்புக்கொண்டுள்ளார். அதிர்வு நிகழ்ச்சியில் அவர் அளித்த பதில்களை அவதானிக்கின்றபோது அவரின் ஆளுமை கேள்விக்குறியாகவே காணப்பட்டது.
ஏ.எல்.ஜுனைதீன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top