புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள்
அரசியல் சாசன சபையிடம் கையளிப்பு


புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்ப ட்டுள்ளன.

அரசியல் சாசன பேரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உப குழுக்களினால் தயாரிக்க ப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் சாசன பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய போதே, அரசியல் சாசன உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி தொடர்பான உப குழு, பொது மக்கள் பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உப குழு,அரச சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான உப குழு மற்றும் மத்திய அரசுக்கும்மாகா ணங்களுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான உப குழு ஆகியவற்றின் அறிக்கைகளே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த தலா உறுப்பினர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அந்த உப குழுக்களுக்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான உத்தேச அறிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த அறிக்கை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர்,

அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்ற போது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறை ஆகிய இரண்டு பிரதான விடயங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

அத்தோடு ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு 3 வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பாக சில அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதை வரவேற்பதாகவும், ஜனாதிபதி முறைமையை முற்று முழுதாக ஒழிக்கப்படவேண்டும் என ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையுடன் மக்கள் கருத்து கணிப்பொன்றும் நடத்தப்பட்டு அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குறிப்பிடும் போது,

மாகாண சபைகளுக்கு வழங்கபடுகின்ற அதிகாரங்கள் தொடர்பில் உறுதியாக தீர்மானிக்கப்பட வேண்டும். அத்துடன் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான செயற்பாடுகளை விரைவுபடுத்த முயற்சிக்காமல் அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்கள் பெறப்பட வேண்டும்.

அத்துடன் ஒற்றையாட்சி என்ற கொள்கையில் இருந்து எந்த மாற்றமும் இடம்பெற கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் அமைப்பு தொடர்பில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்துக்கும் மேலாக மக்களது ஆணை உறுதியாக நிலை நாட்டப்படும் என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்து க்களை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top