வேரோடு அழிக்கப்படும் மியன்மார் முஸ்லிம்கள்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதம் தலை தூக்கி இருந்த மஹிந்தவின் அதே காலப்பகுதியில்தான் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் தலை தூக்கியிருந்தது.இலங்கையைவிடவு ம் அந்த இனவாதம் வெற்றியளித்திருந்தது.மியன்மார் முஸ்லிம்களுக்கு எதுவித உதவியும் கிடைக்காததால் அவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

மியன்மார் போன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதற்கு பேரினவாதிகள் முயற்சித்தபோதிலும்,ஆட்சிமாற்றம் அந்தத் திட்டத்தைத் தோல்வியடையச் செய்தது.ஆனால்,மியன்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும்,அந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

முன்பைவிடவும் இப்போதுதான் அங்கு அதிக தேசங்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.முஸ்லிம்கள் அனைவரையும் கொன்றொழிப்பதற்கான சதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு அத்திட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இலங்கையில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எவ்வாறு பொது பல சேனா செயற்படுகின்றதோ அதுபோல்,மியன்மாரில் பௌத்த தேரர்கள் செயற்படுகின்றனர்.சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என்று வர்ணிக்கப்பட்டு வரும் அஷின் விராது தேரர் இங்கு ஞானசாரவைப்போல் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரங்களிலும்  வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

எவருடை உதவியுமின்றி தனித்துவிடப்பட்ட அப்பாவி முஸ்லிம்களால் இந்த வன்முறையை எதிர்த்து நிற்கும் வல்லமை இல்லை.இதனால்,அவர்கள் செத்து மடிகின்றனர்.முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க பௌத்த பயங்கரவாதம்  அங்கு முஸ்லிம்களை  வேரோடு அழித்து வருகின்றது.மிக விரைவில் முஸ்லிம்கள் எவரும் இல்லாத ஒரு நாடாக மியன்மார் மாறும் என்றே தோன்றுகின்றது.

கடந்த ஆறு வாரங்களில்மாத்திரம் அங்கு 1200 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.முஸ்லிம் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.இதனால்,பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் அயல் நாடான பங்களாதேஷிற்குத் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலைக் கடந்து படகுகளில் செல்லும்போது படகுகள் கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணிக்கும்  நிலையும் ஏற்படுகின்றது.

மியான்மார் இராணுவமே இந்த இன அழிப்பை முன் நின்று  நடத்துகின்றது.இந்த இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கிங் மாநிலத்திற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ ஊடகவியலாளர்களோ செல்ல முடியாது.சர்வதேச தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துவிட்டே இந்த இன அழிப்பு நடத்தப்படுகின்றது.

ஏமாற்றிய ஆங் சாங் சூகி
======================
 சர்வதேசத்தால் ஒரு ஜனநாயகவாதியாக புகழப்படும் ஆங் சாங் சூகியின் கட்சி 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 25 வருட இராணுவ ஆட்சிக்குமுற்றுப் புள்ளி வைத்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையும் நிறுத்தப்படும் என்று முஸ்லிம்கள் நம்பினர்.

ஆங் சாங் சூகி ஒரு ஜனநாயகவாதியாக அறியப்பட்டதாலும் சமாதானத்துக்கான நோபல் பரிசை அவர் வென்றதாலும் அவரது தேர்தல் வெற்றி மியன்மார் முஸ்லிம்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது.இந்த இன அழிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பார் என்று முஸ்லிம்கள் நம்பினர்.ஆனால்,இப்போது அந்த நம்பிக்கையெல்லாம் வீண்போய்விட்டது.

அவர் ஜனநாயகவாதி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓர் இனவாதி என்பதை ஆங் சாங் சூகி வெளிப்படுத்தியுள்ளார்.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதையும் இடம்பெயருவதையும் வீடுகள்,பள்ளிவாசல்கள் அழிக்கப்படுவதையும் அவர் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் அல்லது அழிப்புக்கு அவரே திட்டமிடுகின்றார்.அதுமாத்தி ரமன்றி,அப்படியானதோர் இன அழிப்பு இடம்பெறவில்லை என்று மறுக்கின்றார்.

அதைவிடமும் கேவலமாக சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக முஸ்லிம்களே அவர்களின் வீடுகளை அழிக்கின்றனர் என்ற  சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையும் அவரது அரசு வெளியிட்டு வருகின்றது.இதனால்,முன்னைய  அரசை விடவும் ஆங் சாங் சூகியின் அரசு இந்த இன அழிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவது நிரூபிக்கப்படுகின்றது.

கணக்கிடமுடியாத அளவுக்கு உயிர் இழப்புகள் இடம்பெறுகின்றன என்று தப்பி ஓடும் முஸ்லிம்கள் பங்களாதேஷ்-மியன்மார் எல்லைகளில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கூறி வருகின்றனர்.

அழிக்கப்பட்ட கிராமங்களின் செய்மதிப் படங்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.ஆனால்,மியன் மார் அரசோ அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து வருகின்றது..நா வழமைபோல் இந்த இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றபோதிலும்,அந்த அழிவைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை.

முஸ்லிம் நாடுகள் தொடர் மௌனம்
============================== ===
 எப்போதுமே சொந்த நலன்கள்மீது மாத்திரம் அக்கறை செலுத்தும் முஸ்லிம் நாடுகள் மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பிலும் அவ்வாறுதான் செயற்படுகின்றது.குறிப்பாக,மத் திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால் அவை அனைத்தும் பாராமுகமாகவே இருக்கின்றன.

இதேவேளை,இந்நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.சுன்னி முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக ஷிஆ முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில்தான் இந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

தங்களுக்கு அரசியல் லாபம் எதுவும் ஏற்படாது என்று தெரிந்தால் எந்தவொரு முஸ்லிமையும் காப்பாற்றுவதற்கு இந்த நாடுகள் முற்படாது என்பது மியன்மார் முஸ்லிம்களின் விடயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மார் அரசு ஒரு சாதகமான முடிவை எடுப்பதற்கு -இன அழிப்பை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.மியன்மார் அரசை தன் வழிக்கு கொண்டுவரக்கூடிய துருப்புச் சீட்டுக்கள் சில இந்நாடுகளிடம் இருந்தும்கூட,அவற்றைப் பயன்படுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முன்வராமை கவலைக்குரிய விடயமாகும்.

கேவலம்,அயல்நாடான பங்களாதேஷ்கூட இந்த மக்களுக்கு உதவ மறுக்கின்றது.ஆகக் குறைந்தது மியன்மாரில் இருந்து உயிர் தப்பி வரும் மக்களுக்கு தஞ்சம் கொடுப்பதற்குக்கூட பங்களாதேஷ் முன்வருவதில்லை.இப்படியானதொரு நிலையில் அந்த மக்களை முற்றாக அழித்தொழிப்பது மியன்மார் அரசுக்கு இலகுவான காரியமாகும்.

 [எம்..முபாறக் ]






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top