எல்.ரீ.ரீ.ஈ.
தலைவர் ஒருவரை போடப் போகிறோம் போவோமா..?
மோட்டார்
சைக்கிளை தந்த கருணா தரப்பு..!
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியம்
கங்காராம பகுதியில் அமைந்துள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவு
கட்டடத்தில் “நாளை
எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் போவோமா...?” என பழனிசாமி சுரேஷ் என்பவர் என்னிடம் கேட்ட
போது நான் அதற்கு இணங்கினேன்.
மறுநாள் காலை 6 மணியளவில் பொரளை கனத்தைக்கருகில் வருமாறு கூறியதுடன் அவர்
வந்த சிவப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளொன்றை தனக்குத் தந்ததாக ஜனாதிபதி
பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
ப்ரீதிவிராஜ் மனம்பேரி நேற்று சாட்சியமளித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும்
அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
மஹிலால் வைத்தியதிலக முன்னிலையிலும் விசேட ஜூரிகள் சபை நேற்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மனம்பேரி
சாட்சியமளிக்கயிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருணா தரப்பின் உறுப்பினராக இருந்த பழனிசாமி சுரேஷ் இவ்வாறு
தெரிவித்ததன் பின்னர் இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதியான வஜிர என்பவர் நாளை
காலை 6 மணிக்கு என்னை வருமாறு
தெரிவித்தார் என்றும் மனம்பேரி சாட்சியமளித்தார்.
தொடர்ந்து சாட்சியமளிக்கையில், தான் கருணா குழுவுடன் இணைந்து வடமாகாணத்தில்
எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிரான இராணுவ செயற்பாடுகளில் உதவியதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றும்
போதும் எல்.ரீ.ரீ.ஈ. க்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அரச
தரப்பு சாட்சியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனக்கு தெரிந்தவகையில் கருணா தரப்பினர் எமது பாதுகாப்பு
பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விசேட
பிரிவொன்று அந்தக் காலத்தில் இயங்கியது.
அந்தப் பிரிவில் இணைந்து கருணா தரப்பினர் செயற்பட்டனர்.
கருணா தரப்பு உறுப்பினர்களுடன் அரச தரப்பு இணைந்து எல்.ரீ.ரீ.ஈ. யின் முகாம்களை
தேடி தாக்குதல் நடத்தினர். நானும் இந்த நடவடிக்கையில் இணைந்திருந்தேன்.
பிரதிபொலிஸ் மா அதிபர் ரொஹான் அபேகுணவர்தனவின் கீழ் சேவை
செய்யும் போதும் இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி
நன்றாக பேச வராது என்றாலும் கருணா தரப்பில் சிங்களம் கதைக்கக் கூடியவர்கள்
இருந்தார்கள்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
ரொட்ரிகோ என்பவரின் கீழ் சாரதியாக நான் சேவை செய்துள்ளேன். 2008ம் ஆண்டு வரை நான் சேவை செய்தேன். அதன் பின்னர்
அங்கிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.
வடக்கு, கிழக்கில் கடமையாற்றிய பின் கொழும்புக்கு வந்து கடமையாற்றினாலும் கருணா
தரப்பினர்களுடன் நான் தொடர்பை வைத்திருந்தேன். அவர்களுடன் நான் கதைத்திருக்கிறேன்.
அவர்களின் சிலர் கொழும்பில் தங்கியுமிருந்தார்கள்.
வடக்கு கிழக்கில் இருக்கும் போது நான் கப் ரக வாகனங்கள்
மோட்டார் சைக்கிள்களை செலுத்தியிருக்கிறேன். அதிகளவு கருணா தரப்பினரின் மோட்டார்
சைக்கிள்களை பாவித்திருக்கிறேன். கருணா தரப்பினரால் இந்த மோட்டார் சைக்கிள் எனக்கு
வழங்கப்பட்டிருந்தது.
பங்கரவாதிகளுக்கு எதிராக நடாத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு
நான் இந்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தியிருக்கிறேன்.
மோட்டார் சைக்கிள் செலுத்துவதில் நான் விசேட பயிற்சி
பெற்றிருக்கிறேன். வடக்கு கிழக்கிற்கு செல்வதற்கு முன்னராக களுத்துறை பொலிஸ்
பயிற்சிக் கல்லூரியில் மோட்டார் சைக்கிள் செலுத்துவது சம்பந்தமாக பயிற்சிகளை
பெற்றேன்.
கொழும்புக்கு வந்த பின்னரும் கருணா தரப்பினருடன் நான்
தொடர்பு வைத்திருந்தமை உயர் அதிகாரிகளுக்கு தெரியாது. இந்த சந்தர்ப்பத்திலேயே
கருணா தரப்பிலுள்ள பழனிசாமி சுரேஷ் என்பவரை அறிந்து கொண்டேன்.
பழனிசாமி என்பவர் கொட்டாஞ்சேனையில் வதிவதாக கூறியிருக்கிறார்.
பழனிசாமி பாதுகாப்பு தரப்புடன் மிக நெருங்கி பழகியிருக்கிறார். நான் பாதுகாப்பு
தரப்பு என்று குறிப்பிட்டது அரச புலனாய்வு பிரிவையே.
மட்டக்களப்பில் இருக்கும் போது பழனிசாமி என்பவர் எங்களது
புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
பழனிசாமி கொழும்பில் இருக்கும் போதும் அரச புலனாய்வுப் பிரிவுடன் நெருங்கி
செயற்பட்டார்.
இதனை நான் அவரூடாகவே அறிந்து கொண்டேன். ஒருநாள் கங்காரம
விகாரைக்கு அருகாமையில் வருமாறு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்படி நான்
அங்கு சென்றேன்.
கங்காரம லொண்டறி தோட்டம் அருகில் சென்றதும் சாமியை நான்
சந்தித்தேன். 2006 ம் ஆண்டு
நவம்பர் 6ம் திகதி என
நினைவிருக்கிறது. அலரிமாளிகைக்கு பக்கத்தில் தான் இந்த லொண்டரி தோட்டம்
இருக்கிறது.
இந்தப் பகுதிக்கு நான் இதற்கு முன்னரும் சென்றிருக்கிறேன்.
அலரிமாளிகைக்கு செல்லும் போது இந்தப் பாதையூடாகத்தான் சென்றிருக்கிறேன்.
லொண்டரி தோட்டப் பகுதியில் உள்ள அரச புலனாய்வு பிரிவு
அருகில் வைத்தே பழனிசாமி மோட்டார் சைக்கிளை தந்து எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை
போடப் போகிறோம் வருகிறாராயா..? என கேட்டார். என்றும் அவர் சாட்சியமளித்தார்.
இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அல்லது
10ம் திகதி காலப்பகுதியில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராக
கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோர் கொழும்பில்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கியவர்கள்,
திட்டமிட்டவர்கள் உட்பட 5
குற்றச்சாட்டுக்கள் 6
பேருக்கு எதிராக சட்டமா
அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment