தூரநோக்கு கொண்ட அபிவிருத்தி திட்டத்தின்
அடிப்படையிலேயே செயற்படுகின்றோம்.

வாசுதேவ நாணயக்காரவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் பதில்


தூரநோக்குடன் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம். என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். அவரின் பேச்சுக்கு பதிலளித்து பேசுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பேசுகையில் தெரிவித்ததாவது,
பைத்தியக்காரத்தனமான பேச்சுகளை விட்டு விட்டு அபிவிருத்தியை மட்டும் செயற்படுத்துங்கள். உங்களை மரணமடைந்த இராணுவ வீரர்கள் சபித்துக் கொண்டிருக்கின்றார்கள் கவனமான இருங்கள்,

நாட்டிற்கு அவசியமற்ற அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நாட்டை பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள் இந்த நல்லாட்சி செய்பவர்கள்.

இராணுவ வீரர்கள் மரணித்து வென்று கொடுத்த வெற்றிகளை முறைகேடாக பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் கல்லறையில் உங்களை சபித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை மறந்து விடவேண்டாம்.

மேலும் மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ஒரு போதும் விசாரணைகளை செய்ய மாட்டார்.

காரணம் அவருக்கு சாதகமான வகையிலேயே இலஞ்ச ஊழல் மற்றும் நிதி மோசடிப்பிரிவு போன்றவை செயற்பட்டு வருகின்றது.

இதனால் உடனடியாக பிரதமர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும் அப்படி விலகாவிட்டால் பாரதூரமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆக்ரோசமான முறையில் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை வாசுதேவ நாணயக்கார உரையாற்றும் போது ஒரு சில தகாத வார்த்தைகளையும் பிரயோகித்தார். இதன் காரணமாக பாராளுமன்ற ஒழுக்க விதிமுறைகளை மீற வேண்டாம் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வாசுதேவ நாணயக்காரவின் உரையினைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகளவான கூச்சல்கள் எழுந்ததோடுஅவர் மீண்டும் பாடசாலை கல்வியை தொடர வேண்டும்எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சல்களை எழுப்பியமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதனால் பாராளுமன்றம் அமைதியிழந்து கோஷங்களும் குழப்பமுமாக காணப்பட்டது
பிரதமர் ரணில் விக்ரமசிங்க   
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அளித்து பேசுகையில்,

தூரநோக்குடன் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம். முறையாக தெரிந்து கொள்ளாமல் கருத்து வெளியிட வேண்டாம்.

நாட்டை அபிவிருத்தி செய்வது மட்டுமே எமது நோக்கமாகும், மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் தனிப்பட்டவர்கள் விசாரணை நடத்தவில்லை. நேர்மையான விசாரணைகளே நடைபெறுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ளேயும் பிளவு ஏற்பட்டு இரண்டு மூன்று பிரிவுகள் இருக்கின்றது, முதலில் அதனை சரி செய்து கொள்ளுங்கள்.

அதேபோன்று கடந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த மிகப்பெரிய கடன் தொகையினால் அவற்றினை நிவர்த்தி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டிய கடமை எமக்கு உண்டு.

சீனாவா? இந்தியாவா? முக்கியம் என நாங்கள் முடிவு செய்யவில்லை, யார் மூலம் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்பது பற்றி மட்டுமே நாம் சிந்தித்து செயற்படுகின்றோம்.

இப்போது அமெரிக்கா அதிபர் மாறிவிட்டார், முன்னர் அமெரிக்கா கூறியவை தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடலாம் இது போன்று பல மாற்றங்கள் ஏற்படும்.

இவை அனைத்தையும் தாண்டி நாம் அபிவிருத்தி பாதையில் செல்ல வேண்டிது மட்டுமே முக்கியம். வீணாக குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முயல வேண்டாம் எனவும் பிரதமர் அதிரடியாக கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை பாராளுமன்றத்தில் சபையை குழப்பும் விதமாக கருத்து வெளியிட்டு வந்த கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமரின் இந்த பதில்களைத் தொடர்ந்து அமைதியாக இருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top