தென் கிழக்கின் முக வெற்றிலையாகப் பிரகாசித்த

கல்முனையின் இன்றைய பரிதாப நிலை!

மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்

.ஆர்.எம். ஜிப்ரி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



கடந்த 16 வருடங்களாக கல்முனைத் தொகுதி மக்களை ஏமாற்றி வருகின்ற அரசியல் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் புறந்தள்ளும் காலம் நெருங்கி விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையால் வெருண்டு போயுள்ள அவர்களையும் இவர்களது ஏமாற்று வித்தைகளையும் மக்கள் இப்போது புரிந்து விட்டனர். இவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்ட அனைவரும் அணிதிரள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளருமான .ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.
கல்முனை 13ஆம் குறிச்சியில் கட்சியின் கிளையொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
கல்முனைத் தொகுதியின் நாமம் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்ற காலத்திலிருந்தே புகழ் பெறத் தொடங்கியது. கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர், எம். சீ. அஹமது, .ஆர். மன்சூர் ஆகியோர் தொகுதி அடிப்படையிலான தேர்தல்கள் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியவர்களாவர். 1982இல் நடைபெற்ற பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்டதனால் .ஆர். மன்சூர் அவர்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அவர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் தொடர்ந்து வர்த்தக, வாணிப அமைச்சராகவும் இருந்து எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
1989ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கப்பல், துறைமுகங்கள் புனர்வாழ்வு அமைச்சராகவும் மறைந்த தலைவர் எம். எச்.எம். அஷ்ரப் அவர்கள் பணியாற்றி முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்து கல்முனை மண்ணுக்கு என்றுமில்லாதளவுக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தார்.
இவ்வாறு 53 ஆண்டுகளில் கல்முனைத் தொகுதி காலத்துக்குக் காலம் இருந்த அரசியல் பிரமுகர்களால் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு தென் கிழக்கின் முகவெற்றிலையாகப் பிரகாசித்தது. கடந்த 16 வருடங்களில் கல்முனை பெரும் பின்னடைவைக் கண்டுள்ளதற்கு அம்மக்களின் வாக்குகளைப் பெற்று ஏமாற்றி வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் அதன் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு உல்லாசமாக ஓய்வெடுக்கும் உறுப்பினருமே பொறுப்புக் கூறவேண்டும்.
கல்முனை மாநகரம் என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்த ஒரு நகரமாகும். இதன் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மாநகர சபைக் கட்டடம், பஸ் நிலையம், பொதுச் சந்தை, பொது வாசிகசாலை, நகர மண்டபம், பொது விளையாட்டு மைதானம், சில உள்ளூர் வீதிகள், சாய்ந்தமருது தோணா, அதனைக் குறுக்கறுக்கும் பாலங்கள் என்று எத்தனையோ விடயங்கள் இன்னும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறன.
தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கல்முனை மாநகரசபைக் கட்டடம் 65 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. மிகவும் பொலிவிழந்த நிலையில் காணப்படுகிறது. எமது மாவட்டத்தின் பல பிரதேச சபைக் கட்டடிடங்கள் இதனை விட நவீனமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இங்குதான் புகையிரத நிலையத்தின் பொருட்கள் களஞ்சியப்படுத்தும் உபநிலையமும் காணப்பட்டது. அதேபோல் மாநகர சபைக் கட்டடம் இன்றும் காணப்படுகிறது. எங்கே கல்முனையின் கம்பீரம்?
கல்முனை பஸ் நிலையம் ஒரு காலத்தில் உவெஸ்லிப் பாடசாலைக்கு முன்னால் நாற்சந்தி சுற்றுவட்டத்துக்கு அருகில் இருந்து சந்தாங்கேணி மைதானத்திற்கு முன்னால் இடமாறி தற்போது இருக்கும் இடத்தை வந்தடைந்தது. இதனை மேலும் நவீனமயப்படுத்தி அமைப்பது பற்றிய எண்ணமே கிடையாது.
 இங்கு பிரயாணிகளின் வசதிக்கான மலசல கூடமே இல்லை. அவசரத்துக்கு கல்முனை பஸார் பள்ளிவாசல்கள் கைகொடுக்கிறது. பெண்கள் கூட அங்குதான் செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. கல்முனையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதியே உங்கள் சிந்தையை இது தொடவில்லையா? கல்முனைக்கு வந்துபோகும் வெளியூர் வாசிகள் இந்த நிலமையைப் பார்த்து மூக்கிலே கை வைக்கிறார்களே! இன்னும் உங்களுக்கு ரோசம் வரவில்லையா?
தனியார் பஸ் நிலையத்தை மிக மிக குறைந்த மாத வாடகையில் ஒரு தனியார் வங்கிக்கு வாடகைக்குக் கொடுக்கும் அளவுக்கு மாநகர சபையின் நிலையை மாற்றியுள்ளீர்கள். தனியார் பஸ் வண்டிகள் பிரதான வீதியின் பாதையோரங்களில் தடுமாறித் திரிகின்றன.
கல்முனை பொதுச் சந்தையானது கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவு வர்த்தகப் புரழ்வு நடைபெறும் புகழ் பெற்ற ஓரிடமாகும். .ஆர். மன்சூர் அவர்களின் காலத்தில் இற்றைக்கு 36ஆண்டுகளுக்கு முன்பு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சுற்றிவர இரு மாடிக்கட்டடங்களில் கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டன. ஆண்டு தோறும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு குத்தகைக்குக் கொடுத்து வருமானம் ஈட்டும் இந்த சந்தைக்கு நீங்கள் இந்தப் பதினாறு வருடத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? மழை பெய்தால் காலை வைக்கவே முடியாது. வாகன நெரிசல் ஒரு புறம். இதனை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்யும் எண்ணம் இன்னும் வரவில்லையா? இங்கும் உருப்படியான மலசலகூடம் கிடையவே கிடையாது. நீங்கள் கல்முனையின் மாநகர மேயராகவும் இருந்துள்ளீர்கள். இது கூட உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா?
கல்முனை மாநகரின் பொது நூலகம் .ஆர் மன்சூர் அவர்களின் காலத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவிருந்த .சீ.எஸ். ஹமீது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்றிருந்த நிலையை விடவும் மோசமாக இருக்கிறது. கட்டடங்களுக்கு தீந்தை கூடப் பூசப்படாமல் மங்கிப் போயுள்ளது. நூலகம் என்பது ஒரு ஊரின் இதயம் என்பதை அறியாதவர் போல் உள்ளீர்கள். பெரும் பெரும் நகரங்களுக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அங்கமாக அந்த நகரங்களின் நூலகங்கள் உள்ளன. உதாரணத்துக்கு யாழ்ப்பாணம். அதில் பத்தில் ஒரு பங்காவது இருக்கக் கூடாதா?
ஏழை மக்களின் திருமண வைபவங்கள் மற்றும் விழாக்கள், கலை, கலாசார நிகழ்வுகள், முன் பள்ளிச்சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், கல்விக் கருத்தரங்குகள், செயலமர்வுகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பயிற்சிக் கருத்தரங்குகள், ஒன்று கூடல்கள் என்று எத்தனையோ விதமான நிகழ்வுகள் இடம்பெற்று வந்த இடம்தான் கல்முனை நகர மண்டபம். இங்கு இளைஞர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் விருத்தி செய்வதற்கான எத்தனையோ நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. இதனைக் கூட கல்முனை மாநகர சபை விட்டு வைக்கவில்லை. கேவலம் சிறுதொகை மாத வாடகைக்காக ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தின் ஸ்டோராகப் பாவிப்பதற்குக் கொடுத்துள்ளீர்கள்.
இந்த மண்டபம் தற்போது பெரிதும் சேதப்பட்டுள்ளது. இதனைப் புனரமைப்பதற்கு சேகரித்த வாடகைப்பணம் கூட பேதாது போய்விடும். இதுதான் உங்கள் 16 வருட கால அபிவிருத்தியா? இவ்வாறு பொது மக்களுக்காக அமைக்கப்பட்ட பொதுச் சந்தையை தனியாருக்கு வாடகைக்குக் கொடுத்து குறுக்கு வழியில் கொமிஷன் எடுக்கும் கைவரிசையைத் தொடர்வதற்கு இனியும் மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.
சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சுமார் அரை நூற்றாண்டைக் கடந்தது. எத்தனையோ தடவைகள் அடிக்கற்கள் நடப்பட்டுள்ளன. இது காபெட் ஓடு பாதைகள் கொண்டதாகவும் மின்னொளியிலும் உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தக் கூடியதாகவும் கிட்டத்தட்ட மட்டக்களப்பு வெபர் போன்று அபிவிருத்தி செய்யலாம். அதேபோல், மென்பந்து கிரிக்கட், கரப்பந்து போன்றவற்றுக்கு ஏற்றாற்போலும் அமைக்கலாம். இதற்கிடையில் நீச்சல் தடாகம் அமைக்கப் போவதாக ஒரு மாயை காட்டுகிறார்கள். உடம்பில் உதுதுணியில்லாத குழந்தைக்கு தங்கத்தால் சப்பாத்து போடுவது போல் இருக்கிறது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பதவியும் கையில் இருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றப் பாருங்கள். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இடையில் செய்து முடிக்காது விட்டால் அவ்வளவுதான்.
சில வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு வந்த நிதிகள் கொமிஷன் பேச்சவார்த்தைகள் காரணமாக திரும்பிச் சென்றுள்ளன. அலியார் வீதிக்கும் இதுதான் நடந்தது.
ஆண்டு தோறும் தோணாவைத் தோண்டித் தோண்டி கோடிக் கணக்கில் பைக்கற்றை நிறைக்கும் கையாட்கள் அதனைப் பூரணமாகச் செய்து முடிக்க விடமாட்டார்கள். 2017இல் இதனைப் பூரணமாகச் செய்து முடித்து; அதனைக் குறுக்கறுக்கும் பழமை வாய்ந்த ஒடுக்கமான, சேதமடைந்த பாலங்களையும் செய்து முடிக்க வேண்டுமென மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இப்பணிகளில் துறைசார் நிபுணர்களினதும் சமூக ஆர்வலர்களினதும் நேரடிப் பார்வை இருக்க வேண்டுமென சாய்ந்தமருது சூராசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 16 வருட காலத்தில் செய்து முடிக்காத இப்பணியை அடுத்த வருடத்துக்குள் பூரணப்படுத்துவது உங்களை நம்பி ஏமாந்து வரும் மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஒரு தூரதிருஷ்டியுள்ளவர். மக்களின் காணிப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள், வீடில்லாப்பிரச்சினைகள், மீள்குடியேற்றம், கைத்தொழில், கல்வி, வர்த்தகம், விவசாயம், பாதுகாப்பு என்ற எல்லா விடயங்களிலும் கரிசனை கொண்டு இரவு பகலாகப் பாடுபடுகிறார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு வந்தால் அடுத்த கணமே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஓடோடி வருகிறார். இவ்வளவு காலமும் என்ன செய்தீர்கள்? கோட்டை சரிகிறது என்பதால் தூக்கமே கலைந்து விடுகிறது.

இனி உங்கள் தாளங்களுக்கு இந்த கல்முனைத் தொகுதி மக்கள் ஆட மாட்டார்கள். உங்கள் பாட்டுக்கு வோட்டும் போட மாட்டார்கள். என்றும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top